ETV Bharat / state

காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் பலியான வழக்கு - சிபிசிஐடி கண்காணிப்பில் விசாரிக்க உத்தரவு!

author img

By

Published : Jul 27, 2023, 6:02 PM IST

HC direct
காவிரி

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பிள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக தங்களது உடற்கல்வி ஆசிரியருடன் சென்றனர்.

அவர்கள் போட்டியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும்போது, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியைச் சுற்றி பார்த்துவிட்டு, செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி பலியாகினர். காவிரி ஆற்றில் நான்கு மாணவிகளும் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தனர்.

எங்கள் குழந்தைகளின் மரணத்திற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஜெப்பா சேகேயு இப்ராஹிம், ஆசிரியைகள் பொட்டுமணி, திலகவதி ஆகியோர்தான் பொறுப்பு. இதில் மாணவிகளுடன் சென்ற ஆசிரியைகள் பொட்டுமணி, திலகவதி ஆகியோர் பாதியிலேயே சென்றுவிட்டனர். விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஆசிரியர்களின் கடமையாகும். ஆனால், இதில் ஆசிரியர்கள் கடமையை செய்யத் தவறிவிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிட்டு, பிறகு அப்படியே விட்டுவிட்டனர். பள்ளி மாணவிகளின் மரணத்திற்கு நியாயமான மற்றும் முறையான விசாரணை இல்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று(ஜூலை 27) நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடக்கத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், தற்போது அஜாக்கிரதையால் ஏற்பட்ட மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை சீராக சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், உயிரிழந்த மாணவிகளுடன் சென்ற 11 மாணவிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தேவை என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி இதே விசாரணையை புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் நடத்த உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் பலி - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.