ETV Bharat / state

"தென்மாவட்ட விவசாயிகளை புறக்கணிக்கும் திமுக அரசு" - விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!

author img

By

Published : Mar 22, 2023, 7:48 AM IST

தொடர்ந்து தென் மாவட்ட விவசாயிகளை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளும் மறுக்கப்படுகின்றன என்றும் தமிழக வைகைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்து சா உள்ளார்.

Farmers Union president accused DMK government continuing to ignore the southern district farmers
தென்மாவட்ட விவசாயிகளை திமுக அரசு தொடர்ந்து புறக்கணிக்கனிப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்

தென்மாவட்ட விவசாயிகளை திமுக அரசு தொடர்ந்து புறக்கணிக்கனிப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்

மதுரை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள வேளாண் நிதி அறிக்கையைத் தொடர்ந்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தமிழக வைகைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் சிறப்பு நேர்காணல் வழங்கினார். அதில் அவர், "தமிழகத்தில் தொடர்ந்து 3 வது ஆண்டாக வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் தமிழக முதலமைச்சருக்கும், வேளாண்துறை அமைச்சருக்கும், அத்துறையின் அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவில் விளையும் 30 லட்சம் மெட்ரிக் டன் அளவுள்ள முண்டு வத்தல் உற்பத்தியில், 3-இல் ஒரு பங்கு ராமநாதபுரத்திலிருந்து தான் செல்கிறது. இங்கிருந்து உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு அந்தஸ்து அண்மையில் வழங்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் மிளகாய் மண்டலமாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

அதேவேளையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விளைகின்ற முண்டு மிளகாய் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றைப் போல நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்ததாகும். உலகத்திற்கே ஏற்றுமதியாகும் இந்த மிளகாய் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலையை இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைப்போல, ராமநாதபுரத்தில் உற்பத்தியாகும் குண்டு மிளகாயை தமிழக அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை எங்களின் கோரிக்கையாக வைக்கிறோம்.

மேலும் ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி, குண்டாறு, வைகை நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய கையோடு கிடப்பிலே போடப்பட்டுள்ளது. சுமார் ஏழு மாவட்டங்களின் நீராதாரப் பிரச்சனையாக, பாசன வசதியாக, கால்நடை வளர்ப்பிற்காக, பல்வேறு நலத்திட்டங்களுக்காக செயல்படுத்த வேண்டிய இந்த நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் தமிழக அரசு ஏமாற்றியுள்ளது.

வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக 90 நாட்கள் நடந்த சம்பா மகசூல் பாதிக்கப்பட்டு இன்றளவும் திருவாடானையில் 1.37 லட்சம் விவசாயக் குடும்பங்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஒரு அறிவிப்பு இடம் பெறவில்லை.

இது எங்களுக்கு மிகுந்த மனவலியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. காரணம், மூன்று போகம் விவசாயம் செய்யக்கூடிய டெல்டா மாவட்டப் பிரச்சனைகளில் தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு தீர்த்து வைக்கிறார். தென்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டக் குரல்கள் தமிழக முதலமைச்சரின் காதுகளை எட்டுவதில்லை. காரணமும் புரியவில்லை. இது தொடர்பாக முதலமைச்சர் உட்பட தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும் கூட எங்களுக்கு இதுவரை தீர்வில்லை.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2,500 வழங்குவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், வெறும் ரூ.100 ஊக்கத் தொகை என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். அதேபோன்று கரும்பு விவசாயிகளுக்கான ஆதார விலை ரூ.4 ஆயிரம் என வாக்குறுதி தந்துவிட்டு ரூ.195 ஊக்கத் தொகை என அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.

விவசாயிகளான எங்களின் வாழ்வதாரத்தை மீட்டெடுப்பதற்கு எந்த வழியும் இல்லாத நிலையில், தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் விவசாயிகளை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் நூறு நாள் வேலைப் பணியாளர்களை விவசாயத் திட்டங்களில் பயன்படுத்த எந்தவித அறிவிப்பும் இல்லை.

டெல்டா பகுதி விவசாயிகளையும், தென்மாவட்ட விவசாயிகளையும் வேறு வேறாக நினைப்பது மிகத் தவறான போக்கு. ராமநாதபுரம் மாவட்டத்தில் 640 பொதுப்பணித்துறை கண்மாய்களும், 1,117 ஒன்றியக் கண்மாய்களும் உள்ளன. வைகை அணையிலிருந்து கொண்டு வரப்படுகின்ற 15 ஆயிரம் கன அடி தண்ணீரில், 8 ஆயிரம் கன அடித் தண்ணீரைச் சேமிக்கின்ற அளவிற்கு தான் நீர்நிலைகள் உள்ளன என்று பொதுப்பணித்துறையே கூறுகிறது.

கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள கண்மாய்களில் ஒரு சொட்டுத் தண்ணீர் தேக்கி வைப்பதற்குக் கூட வழியில்லை. காரணம், நீர்வழித்தடங்கள் அனைத்தும் குறிப்பாக கூத்தங்கால்வாய், ரகுநாத காவிரி, நாராயண காவிரி போன்ற கால்வாய்கள் அனைத்தும் அடைபட்டுக் கிடக்கின்றன. மாநில அரசின் நிதி ஒன்றியக் கண்மாய்களுக்கு வரவில்லை என்று கூறுகிறார்கள். நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒன்றிய மற்றும் பொதுப்பணித்துறை கண்மாய்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

பாண்டிய மண்டலம் மட்டும் தமிழக அரசால் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறது என்றே குற்றம்சாட்டுகிறேன். சூரங்குடி, கோவில்பட்டி போன்ற பகுதிகளில் விளையும் நவதானியங்கள், மிளகாய், பருத்தி மற்றும் வெங்காயம் போன்றவையெல்லாம் அழிந்தன. இதற்காக கடந்த 4 ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு அந்த விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால், இதுவரை கொடுக்கவில்லை. இதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எங்களுக்கான நீதியைப் பெறுவதற்கு நீதிமன்றப்படிகளில் ஏறித்தான் சாத்தியமாக்க வேண்டியுள்ளது.

இதனை மிகப் பெரும் அவலமாகவும் வருத்தத்திற்குரிய விசயமாகவும் நாங்கள் பார்க்கிறோம். டெல்டா பகுதியில் சிறு பிரச்சனை என்றால்கூட கணக்கெடுக்காமலே உடனடியாக நிவாரணம் அறிவிக்கக்கூடிய தமிழக அரசு, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதில் என்ன தயக்கம்..? தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒரு வாக்குதான் செலுத்துகிறார்கள். டெல்டா விவசாயிகள் மட்டும் 2 வாக்குகளா செலுத்துகிறார்கள்..?

ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை வறட்சி பகுதிகளாக தமிழக அரசு தொடர்ந்து அறிவிப்பது தவறானது. அதற்கு மாறாக, இப்பகுதிகளில் முண்டு மிளகாய் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இங்கிருந்து கொண்டு செல்லப்படுவது எவ்வாறு.? நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக பருத்தி இங்கே அதிகம் விளைகிறது. ஆனால் பருத்திக்கு தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலையை கொடுக்க மறுக்கிறது.

அதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 5 கோடி பனைமரங்கள் இருந்தன. அவற்றை செங்கல் சூளைக்காகவும், வேறு பயன்பாட்டிற்காகவும் திட்டமிட்டு வெட்டிச் சென்று விட்டார்கள். ஒரு பனை மரம் வளர்வதற்கு 120 ஆண்டுகளாகின்றன. அவற்றைப் பாதுகாக்கவும் பனைமரங்களை நம்பியுள்ள தொழிலாளர்களைக் காக்கவும் தமிழக அரசு சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்து அதற்கென அரசாணை வெளியிட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு எந்த திட்டமும் இல்லை.

மதுரையிலிருந்து வருகின்ற வைகையாற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது ராமநாதபுரம் மக்களின் பல்லாண்டு கோரிக்கை. ஏன் தமிழக அரசு இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது என தெரியவில்லை. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் காமராஜர் காலத்தில் அறிவிக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட இந்த திட்டத்திற்கு ரூ.766 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். தற்போதைய திமுக அரசு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. ஆனால் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. எப்போது நடைமுறைப்படுத்துவீர்கள்..? அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அறிவித்த தமிழக அரசு, ராமநாதபுரத்திற்கு மட்டும் அறிவிக்க மறுப்பது ஏன்..?

கடந்த 2020-2021ஆம் ஆண்டு பெய்த அதிக கனமழை காரணமாக சுமார் 30 ஆயிரம் ஹெக்டேரில் பயிடப்பட்டிருந்த மிளகாய்ப் பயிர்கள் அனைத்தும் அடியோடு அழிந்தன. இதற்காக ஊக்கத்தொகையும், நிவாரணமும் கேட்டு நடையாய் நடக்கிறோம். ஆனால் இன்று வரை வழங்கப்படவில்லை. இதற்கான மர்மம் என்ன..? எங்களின் தலைமுறைகள் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இல்லையா..? தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப் பெரிய குளறுபடிகள் நடைபெறுகின்றன. இத்திட்டம் விவசாயிகளுக்கு பாதகமாகவே உள்ளது.

பல்வேறு மாநிலங்கள் இந்தத் திட்டத்தை அவர்களே ஏற்று நடத்துகிறார்கள். தமிழக அரசும் இத்திட்டத்தை ஏற்று செயல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தினால் அப்பகுதி வளர்ச்சியடையும். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பெருநிறுவனங்கள் நன்செய் நிலங்களை மட்டும் எடுத்துக் கொண்டு புன்செய் நிலங்களை விட்டுவிடுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் மானாவாரிப் புன்செய் நிலங்களைக் கொண்டுள்ள பகுதியாகும். இந்நிலையில் எப்படி நியாயம் கிடைக்கும்?

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் விவசாயிகளுக்கு காலவிரையமின்றி நிவாரணத்தொகையை வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும். ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு வழங்கமாட்டோம் என்ற அரசின் விதிகளைத் தளர்த்த வேண்டும். கனமழை மற்றும் பருவமழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை அறிவித்து வழங்க வேண்டும் என்றார்.

மேலும் அவர், உற்பத்தியான நெல்லைப் பாதுகாக்கும் கிட்டங்கி வசதியும், நவீன அரிசி ஆலையும் ராமநாதபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அதனை தமிழக அரசு கவனத்திற் கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: சிறுதானியங்களுக்கு சிறப்பு கவனம்..! பனைக்கு ஆராய்ச்சி மையம்..! வேளாண் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.