முறைகேடுகளில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர், அலுவலர் மீது நடவடிக்கை - சிபிஎம் கோரிக்கை

author img

By

Published : Sep 17, 2021, 11:05 AM IST

cpm-balakrishnan-urges-to-take-action-on-officers-who-helped-mlas-in-admk-regime

அதிமுக ஆட்சியின் போது முறைகேடுகளில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குத் துணை போன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை: சங்கரய்யா நூற்றாண்டு விழா, நிதி பங்களிப்பு கருத்தரங்கம் மதுரை கே.கே. நகரில் உள்ள கிருஷ்ணய்யர் ஹாலில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக தொடர்ந்து மாணவ, மாணவிகளின் தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மக்களுடன் தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். மாணவர்களும் இணைந்து போராட வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்து தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விற்கு விதிவிலக்கு கொடுக்கவேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் 100விழுக்காடு திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் வெல்லும்.

முறைகேடுகளில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர், அலுவலர் மீது நடவடிக்கை - சிபிஎம் கோரிக்கை

ஒன்றிய அரசால் சமையல் எரிவாயு விலை பல மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. மோடி அரசுக்கு மூன்று மாதத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. ஏழை மக்களை வாட்டி வதைக்கும் எண்ணம், இன்னொரு பக்கம் டெல்லியில் விவசாயிகள் கடந்த 11 மாத காலமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தப் போராட்ட பிரச்னைகளை தீர்க்க குறைந்தபட்ச நடவடிக்கையைகூட ஒன்றிய அரசு எடுக்கவில்லை.

விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கொடுத்து விட்டோம் என்கிறார்கள். இந்தாண்டு ஒரு விழுக்காடு கூட உயர்த்தப்படவில்லை. இன்றைக்கு சந்தையில் விவசாயிகள் அடிமாட்டுக்கு பொருள்களை விற்கிற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

மோடி அரசு அடம்பிடித்து விவசாயிகளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்ததுள்ளார். மூன்று வேளாண் சட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று ஒன்றிய அரசு தொடர்ச்சியாக கூறிவருகிறது.

வருகின்ற 27ஆம் தேதி இந்தியா முழுவதும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மகத்தான பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள இடதுசாரிகள், எல்லா கட்சிகளும் சேர்ந்து விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்ற அமைப்புகள் எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய ரயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்து உள்ளோம்.

கடந்த கால ஆட்சியில் அதிமுக அமைச்சர்கள் அளவுக்கு அதிகமாக ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மட்டுமல்லமால், அவர்களுக்கு துணை போன அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்கக்கூடாது. அமித்ஷா இந்தி மொழியில் பேசினால் மாநிலம் வளர்ச்சி அடையும் என பேசியது அரைவேக்காட்டுத்தனமானது" என்றார்.

இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.