ETV Bharat / state

மதுரையில் முஸ்லீம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடி என புகார் அளித்த பாஜக.. ஐயூஎம்எல் நிர்வாகிகள் ரியாக்‌ஷன்!

author img

By

Published : Jun 24, 2023, 11:12 PM IST

Updated : Jun 26, 2023, 6:04 PM IST

மதுரை
மதுரை

புகழ்பெற்ற மதுரையின் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே பாகிஸ்தான் நாட்டின் தேசியக் கொடியை போன்ற கொடி பறந்ததாக பாஜக பிரமுகர் ஒருவர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

மதுரை விக்டர் மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் கொடி

மதுரை: பா.ஜ.கவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான முத்துக்குமார் என்பவர், மதுரை மாநகர காவல் ஆணையாளர் டி. செந்தில்குமாருக்கும், மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாருக்கும் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "நான் பல்வேறு பொது நல வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் தொடுத்துள்ளேன். மதுரை தேவர் சிலையிலிருந்து ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தில், அண்ணா சிலைக்குச் செல்வதற்கு வலது புறம் திரும்பும் வழியில் பாலத்தில் உயரமாக, அனைவருக்கும் தெரியும் வகையில் பாகிஸ்தான் தேசிய கொடியை போன்று பிறை நட்சத்திரத்துடன் கூடிய கொடி ஒன்று நடப்பட்டு பறக்க விடப்பட்டுள்ளது. இது அனைவரின் பார்வையிலும் தெளிவாக படும் வகையில் உள்ளது.

இதுவரை இந்த செயலை செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை. யாரும் பொறுப்பேற்கவும் இல்லை. பக்கத்தில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்கு பல வெளி நாட்டவரும், பல்வேறு வெளி மாநிலத்தவர்களும் வந்து செல்கிறார்கள். அவர்கள் அதை போட்டோ வீடியோ எடுத்து இந்தியாவில் பாகிஸ்தான் கொடி பறப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் இதை பயன்படுத்தி சமூக விரோதிகள், தேச துரோகிகள் இது போன்ற கொடிகளை இந்திய தேசம் முழுவதும் பறக்க விடுவார்கள். இதனால் தேவையில்லாத சமூக மோதல்கள் ஏற்படும், மத ஒற்றுமை சீர் குலையும். கொடிகள் பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட இந்த பாலத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், மதவாத அமைப்புகளும் தங்கள் கொடிகளை பறக்க விடுவதற்கு முயற்சி செய்வார்கள்.

அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் விளம்பரம் செய்ய கூடாதென்று சமீபத்தில் கூட அரசாணை பிறப்பிக்கபட்டுள்ளது. ஆனால் இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரை சேதப் படுத்தி, துளையிட்டு இரும்பு கொக்கிகள் போட்டு, அரசு ஆணை மற்றும் அனுமதியை மீறி பாகிஸ்தான் கொடியை போன்ற கொடியை பறக்க விட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை கோரியும், கொடி கம்பத்தை உடனடியாக அகற்றும் படியும் பொது நலன் கருதி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொடியை அகற்றுவது தொடர்பாக பா.ஜ.கவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான முத்துக்குமார் அளித்த புகாரை, மதுரை மாநகராட்சி உதவி பொறியாளர்கள் பொன்னுமணி, சந்தானம், சங்கிலி ஆகியோர் காவல்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொடியானது முஸ்லீம் லீக் கொடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது அபபுபக்கர் கூறுகையில், "மதுரை ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தில் பறக்கின்ற கொடி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி ஆகும். இது பாகிஸ்தான் நாட்டுக் கொடி என்று தவறாக பாஜகவினரால் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்னால் காயிதே மில்லத்தால் இக்கொடி மதுரையில் ஏற்றப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியால் வடிலமைக்கப்பட்டது. இந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே இப்படி இந்திய முஸ்லிம் லீக் கட்சியால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரலாறு தெரியாதவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதுகுறித்து மதுரை மாநகர காவல் ஆணையரிடம் முழு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.எம் காதர் மொய்தீன் கூறுகையில், "இது முற்றிலும் தவறானது. பாகிஸ்தான் கொடியை பொறுத்தமட்டில், அதில் பாதி பச்சை நிறமாகவும், பாதி வெள்ளை நிறமாகவும் இருக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியை பொறுத்தவரை, முழுமையாக பச்சையாகவும் இருக்கும். இதில் பிறை நட்சத்திரம் மட்டும் வெள்ளையாக இருக்கும்" என தெரிவித்தார். மேலும் இந்த கொடியானது 1906 ஆம் ஆண்டிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட கொடியாகும்" என தெரிவித்தார் .

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்.. இரண்டு பெண்களுக்கு வார்னிங்!

Last Updated :Jun 26, 2023, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.