மதுரை: ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் சனிக்கிழமை (அக்.21) முதல் செவ்வாய்க்கிழமை (அக்.24) வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களான கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, ஒவ்வொரு ரயிலிலும் காத்திருப்பு பட்டியல் 400க்கும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். சென்னை முதல் நெல்லை வரை ஒரு வழிப்பாதை இருக்கும்போது கூட அதிக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது சென்னையில் இருந்து நெல்லை வரை இரட்டை அகல ரயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிந்து 110 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் சூழலிலும், சிறப்பு ரயில் இயக்குவதில் தெற்கு ரயில்வே ஆர்வம் காட்டாமல் இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர் விடுமுறை என்பதால் ரயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர். அப்படி இணையதளம் மூலம் அதிக அளவில் முன்பதிவு செய்வதால், முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் இடங்கள் பூர்த்தியாகி விடுகின்றன. தட்கல் டிக்கெட்டுகள் ஒரு நிமிடத்தில் விற்று தீர்ந்து விடுகின்றன. அதனால், நெரிசல் அதிகமாக உள்ள மார்க்கங்களில், கூடுதல் ரயில்களை இயக்கினால் வசதியாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இது குறித்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், "சென்னையில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிப்படும் நிலையில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.
மேலும், விடுமுறை முடிந்து சென்னை செல்வதற்கு செவ்வாய்கிழமை நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். அதேபோல, நெல்லை - பெங்களூரு இடையே மதுரை, தென்காசி வழியாக ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.
கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து மதுரை செல்ல முடியாமல் நூற்றுக்கணக்கான பயணிகள் தவித்தனர். எனவே, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு செவ்வாய்கிழமை மாலையில் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை இடையே இருவழிப்பாதை பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து உள்ளதால் கூடுதல் ரயில்கள் இயக்குவதில் எந்த இடையூறும் இருக்காது" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: மதுரை ஆவின் பணி நியமன ஆணைகளை ரத்து செய்தது செல்லும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை