ETV Bharat / state

சோழவந்தானில் கழிப்பறைகள் கட்டுவதை நிறுத்த கோரிய வழக்கு தள்ளிவைப்பு

author img

By

Published : Dec 8, 2022, 11:00 PM IST

Etv Bharat
Etv Bharat

சோழவந்தான் அருகே வைகை ஆற்றை மாசடைய செய்யும் வகையில் கட்டப்பட்டு வரும் கழிப்பறையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிய வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மதுரை: சோழவந்தானைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சோழவந்தான் வைகை ஆற்றுப் பகுதியில் நாராயணப் பெருமாள் கோயில், சனீஸ்வரர் கோயில், வட்டப்பிள்ளையார் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன.

ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாள் நடக்கும்போது, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார். சோழவந்தானைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது, இங்கு மேலும் கழிப்பறைகள் கட்டப்படுகிறது. இது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக அமையும். ஏற்கனவே இருக்கும் கழிப்பறைகள் முறையாக பராமரிப்பதில்லை. மேலும் வைகை ஆறு மாசு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வைகை ஆற்றங்கரையோரம் வட்டப்பிள்ளையார் மற்றும் சனீஸ்வரன் கோயில் அருகே கழிப்பறை கட்டத் தடை விதிக்க வேண்டும். மாற்றிடத்தில் கழிப்பறை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், “மனுதாரர் குறிப்பிடும் பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக கண்டறியப்பட்டதால், கழிப்பறை அமைக்கப்படுகிறது. கழிப்பறை கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. வேண்டுமென்றே புகார் கூறப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கழிப்பறைக்கு சாக்கடை வசதி உள்ளதா? கழிப்பறை அமைப்பதால் வைகை ஆற்றுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஏன் தாமதம்? – RTI-யில் அதிர்ச்சி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.