ETV Bharat / state

ஓசூரில் ரூ.3.5 கோடி வீட்டு வசதி வாரிய நிலம் முறைகேடு.. உதவி வருவாய் அலுவலர் உட்பட ஏழு பேர் கைது.. 62 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 4:46 PM IST

ரூ.3.5 கோடி மதிப்புமிக்க ஓசூர் வீட்டு வசதி வாரிய நிலம் முறைகேடு
ரூ.3.5 கோடி மதிப்புமிக்க ஓசூர் வீட்டு வசதி வாரிய நிலம் முறைகேடு

Hosur Housing Board Land Issue: ஓசூரில் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த உதவி வருவாய் அலுவலர் உட்பட ஏழு பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், கோகுல் நகர்ப் பகுதியில் உள்ள பகுதி 16 வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து நிலம் விற்பனை செய்த சம்பவத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் உட்பட 7 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான ஓசூர் கோகுல் நகர்ப் பகுதியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 16ல் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற இந்த நிலத்தை, போலியாக சில நபர்கள் ஆவணங்கள் தயாரித்து பத்திரம் செய்ததாக, வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்குப் புகார் வந்துள்ளது.

புகாரினைத் தொடர்ந்து, விசாரணைக்குப் பின் பாஸ்கர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் பாஸ்கர் அளித்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.சரோஜ்குமார் அறிவுரைப்படி, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ராஜா ரவி தங்கம் தலைமையில் ஆய்வாளர் சாவித்திரி உட்பட தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: குமரியில் விவசாய நிலத்தை தரிசாக மாற்றித்தர லஞ்சம்: பெண் துணை தாசில்தார் கைது!

இது தொடர்பான விசாரணையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் ஆராவமுதுவை கைது செய்தனர். பின் தொடர் விசாரணையில், முக்கிய குற்றவாளியான மதி என்கின்ற மதியழகனை (இவர் ஏற்கனவே ஈரோடு பகுதியில் ஈமு கோழி விற்பனையில் 10 வருடம் சிறை தண்டனை பெற்றவர்) கைது செய்தனர்.

மேலும், அவருடன் உடந்தையாக இருந்த ஓசூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், டேனில், ஸ்ரீதர், முருகதாஸ், ஆனந்த் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 செல்போன்கள், 62 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏழு பேரை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற காவலில், சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை என்கவுண்டர்; ஆர்டிஓ முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்ய திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.