ETV Bharat / state

“அதிமுக-பாஜக கூட்டணி முறிவால் திமுகவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது” - கே.பி.முனுசாமி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:29 PM IST

kp-munusamy-says-admk-bjp-alliance-breakup-scares-dmk
”அதிமுக-பாஜக கூட்டணி முறிவால் திமுகவிற்கு பயம் சொல்கிறார் ...கே.பி.முனுசாமி”

K.P.Munusamy: அதிமுக-பாஜக கூட்டணி முறிவு, திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று காலை அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை.

அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து தமிழக பாஜக தலைமை உண்மைக்கு புறம்பாக பேசி, அவதூறாக விமர்சனம் செய்து வருவது 2 கோடி அதிமுக தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக - பாஜக இடையே கூட்டணி கிடையாது என அறிவித்த பிறகு, ஊடகங்களில், அரசியல் விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், தவறான கருத்துகளை தெரிவித்து வருவது ஏற்புடையது அல்ல. எனவே, ஊடகங்களில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தோ்தல்கள் என இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்பது நாடகம் என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது, திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் பயத்தில் பேசி வருகின்றனர். தற்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்க வைத்துக்கொள்ள, கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களிடம் பேசி வருகின்றனர். 'INDIA' கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. தமிழக மக்களின் நலன், உரிமைகள் சார்ந்தே 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் சந்திப்போம். ஏற்கனவே 2014-ஆம் ஆண்டு காவிரியில் தண்ணீர் பெறுவது தொடர்பாக அதிமுக எம்பிக்கள் 22 நாட்கள், நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கினோம்.

வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி சந்திப்போம். அதிமுக கூட்டணியில் வலுவான கூட்டணி அமையும். இந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இணையும் என்பதை காலம்தான் முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. மேலும், 9 ஆண்டு கால பாஜக ஆட்சியின் நிறை குறைகள் குறித்து பேசுவோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.2000 செல்லாது எதிரொலி! திருச்செந்தூர் கோயில் உண்டியல் திறப்பு! காணிக்கையாக ரூ.2 கோடி வசூல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.