ETV Bharat / state

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து; உயிரிழந்த 14 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - ஈபிஎஸ் இரங்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 12:27 PM IST

Updated : Oct 8, 2023, 1:36 PM IST

Fire crackers shop Fire accident
அத்திபெல்லி பட்டாசு கடை தீ விபத்து

Fire crackers shop Fire accident: தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், காயமடைந்த ஏழு நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்து

கிருஷ்ணகிரி: தமிழகம் - கர்நாடக எல்லையான பெங்களூரு - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்பள்ளி எல்லைப் பகுதியில் பாலாஜி கிராக்கர்ஸ் என்ற பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ…

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், நேற்று (அக்.7) மாலை பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் பணியாற்றிய தருமபுரி மாவட்டம், நீபத்துரை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (20), அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடப்பன் (25), ஆதிகேசவன் (23) விஜயராகவன் (20), இளம்பருதி (19), ஆகாஷ் (23), கிரி (22), சச்சின் (22), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் (17), வசந்தராஜ் (23), அப்பாஸ் (23), மேலும் அடையாளம் தெரியாத இரண்டு உடல்கள் என மொத்தம் 14 பேரின் உடல்கள் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இந்த தீ விபத்தில் 12 பேர் உடல் கருகி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (அக்.8) உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பலத்த காயமடைந்த நவீன், ராஜேஷ், வெங்கடேஷ் ஆகிய மூவரும் பெங்களூரு மாடிவாலா பகுதியில் உள்ள செயிண்ட் ஜான்சன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் சஞ்சய், சந்துரு, ராஜேஷ், பால் கபீர் ஆகிய நான்கு பேரும் பலத்த காயம் ஏற்பட்டு அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.7) விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று (அக்.7) கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விபத்தில் இறந்தவர்களுக்கு தனது X பதிவில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.8) தனது X பதிவில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை, இந்த விடியா திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறி இருந்தார்.

இதையும் படிங்க:இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் பிரபல பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா!

Last Updated :Oct 8, 2023, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.