ETV Bharat / state

முதற்கட்டமாக சென்னையில் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Dec 29, 2021, 10:07 PM IST

முதற்கட்டமாக சென்னையில் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம்
முதற்கட்டமாக சென்னையில் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம்

கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி முதற்கட்டமாக சென்னையில் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் மற்ற மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

கரூர்: வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அலுவலகத்தில் இன்று (டிச.29) மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் விவசாய நிலங்களில் உள்ள இலவச மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை முன்னுக்குப் பின் முரணானது. இனி வருங்காலங்களில் உண்மை நிலையைத் தெரிந்துகொண்டு அறிக்கைகளை வெளியிட வேண்டும். இருப்பினும் ஒன்று, இரண்டு குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் ஒரு லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

சூரிய மின் உற்பத்தியில் 4000 மெகாவாட் அளவிற்கு உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல நீரோட்டம் மூலம் மின் உற்பத்தி சுமார் 3000 மெகாவாட் அளவிற்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி 53 விழுக்காடு மட்டுமே, மீதமுள்ளவற்றை தனியாரிடம் இருந்து பெற்று மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகள் புதிதாக மாற்றியமைக்க கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 6 ஆயிரம் புதிய மின்மாற்றிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மாதம்தோறும் மின் கணக்கெடுப்பு?

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பிய பிறகு மாதாந்திர மின் கணக்கீடு கொண்டு வர உள்ளது. கரூர் நகராட்சி பகுதியில் ரூ.22 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விரைவில் கரூர் உள்பட 12 இடங்களில் புதிய பேருந்து நிலைய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார். கரூர், திருமாநிலையூரில் ரூ. 64 கோடியில் பேருந்து நிலையப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு அரசு எப்பொழுதும் துணை நிற்கும். உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகையை வழங்க அரசு தயாராக உள்ளது.

ஆனால், ஏற்கெனவே ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டதுபடி இழப்பீடு தொகை பெற்ற விவசாயிகள் தற்போது இரட்டிப்பு இழப்பீடு தொகை வழங்கவேண்டுமெனக் கூறுகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம் கொண்டு செல்லும் பணிகள் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் மற்ற மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். விரைவில் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Thoothukudi massacre: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முன்னாள் ஆட்சியர் விசாரணைக்கு ஆஜர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.