ETV Bharat / state

ஆயிரம் ரூபாய் செலவில் செயற்கைக்கோள் உருவாக்கி அசத்தல்.. கரூர் மாணவனின் கனவு நனவானது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 5:33 AM IST

Updated : Nov 16, 2023, 5:38 PM IST

லோ பட்ஜெட் செயற்கைக்கோள் செய்து அசத்திய கரூர் மாணவர் ஜெயப்பிரகாஷ்
லோ பட்ஜெட் செயற்கைக்கோள் செய்து அசத்திய கரூர் மாணவர் ஜெயப்பிரகாஷ்

Helium ballon satellite invention by twelfth grade student in Karur: வாகனங்கள், தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் புகை காரணமாக ஏற்படும் காற்று மாசு அளவினைக் கண்டறிய ஆயிரம் ரூபாய் செலவில் சிறிய வகை செயற்கைக்கோளை கண்டுபிடித்த கரூர் மாணவரின் அசத்தலான கண்டுபிடிப்பை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

லோ பட்ஜெட் செயற்கைக்கோள் செய்து அசத்திய கரூர் மாணவர்

கரூர்: அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் புதிய வரலாற்றைப் பதியத் துவங்கியுள்ளது, இந்தியா. அறிவியல் உலகின் சாதனை பட்டியலில் இந்தியா தனக்கான ஓரு இடத்தை உலக அளவில் உருவாக்கியுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது பள்ளி, கல்லூரிகளில் ஊக்குவிக்கவிக்கப்படும் அறிவியல் சிந்தனைகள்தான் என்றால் அது மிகையாகாது. அன்றாட வாழ்வு அறிவியலை வெளிக்கொணரும் இன்றையப் பாடத்திட்டங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே எதிர்நோக்கும் சாதனைகளின் பாதையாக அமைகிறது.

இதற்கான காரணமாக அமைந்துள்ளது, கரூர் மாணவரின் அசத்தலான ஹீலியம் பலூன் செயற்கைக்கோள் கண்டுபிடிப்பு. குறைந்த மதிப்பில் மனிதர்களுக்குச் சவால் நிறைந்த காற்று மாசுகளை அளவிட உருவாக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் நிரம்பியுள்ள மாசு காரணிகளால் மனிதர்கள் மட்டுமல்லாமல், பிற உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதனைக் கண்டறியவே உருவாக்கப்பட்டுள்ளதாக இதனை வடிவமைத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான ஜெயபிரகாஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தின் மையப் பகுதியாகவும், ஜவுளி, பேருந்து கட்டுமான தொழில், கொசுவலை உற்பத்தி தொழிற்சாலை போன்ற தொழில் நிறுவனங்களால் வளர்ச்சி பெற்று வருகிறது கரூர் மாவட்டம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதென்று சொல்வது போல, கிராமங்களிலிருந்து தோன்றும் புதுப்புது யோசனைகள் நாட்டின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றது. கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில், தொழிற்சாலைகளின் பிரம்மிப்பில் அமைந்துள்ளது புலியூர் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள கவுண்டம்பாளையம் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த டீக்கடையில் டீ மாஸ்டராக உள்ள கண்ணன், அழகுமணி தம்பதியரின் மகன் ஜெயபிரகாஷ்(16). சிறியதொரு கிராமத்தில் பிறந்த உலகளவு விஞ்ஞானிகளைத் திரும்பிப்பார்க்கச் செய்துள்ளார் ஜெயபிரகாஷ்.

உலகின் விஞ்ஞானிகளைத் திரும்பிப் பார்க்கச் செய்த ஜெயபிரகாஷ் யார்..? அவர் நிகழ்த்திய அசாத்திய சாதனை என்ன? எங்கிருந்து இவரின் சாதனை தொடக்கம் கண்டது என்ற பல கேள்விகளுக்கு மாணவர் ஜெயபிரகாஷின் திடமான பதில்கள் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது.

மாற்றம் எல்லாம் வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகும் என்பது போல, ஜெயபிரகாஷின் வீட்டருகில் இருக்கும் சிமெண்ட் ஆலையில் இருந்து தினமும் அவரது வீட்டின் மேற்கூறையில் மண் துகள்கள் விழுவதனைக்கண்டு, அதற்கு தீர்வை காண வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது மாணவரின் லோ பட்ஜெட் செயற்கைக்கோள்(Low budge satellite). என்ன செய்வது என்ற யோசனையிலிருந்த சமயத்தில், துடுப்புச்சீட்டுப்போல் அமைந்தது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.

காற்றில் ஏற்படும் மாசினை கண்டறியும் முறை குறித்து புதிய கருவியை உருவாக்கும் யோசனையைப் பெறுகிறார் இளம் விஞ்ஞானி ஜெயபிரகாஷ். அவரது யோசனைக்கு உயிர்கொடுக்கப் பள்ளியில் உள்ள அறிவியல் ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் பரணி பள்ளி குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியம் ஆகியோரின் உதவியை நாடுகிறார். பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின், திட்டத்திற்கான அஸ்திவாரத்தைச் சமப்படுத்தும் வகையில், இந்தத் திட்டத்திற்கான தேவைகள், தொழில்நுட்பங்களுக்கான வழிமுறைகளுக்குக் கோவையில் உள்ள ஐபோட்ஸ் என்ற தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீர்வு காண்கிறார்.

பூமியின் தரைப்பகுதியிலிருந்து பத்து முதல் 20 கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள வெப்பமண்டலத்தில்(Troposphere) ஏற்பட்டிருக்கும் காற்று மாசு அளவினை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, அளவுக்கு அதிகமான காற்று மாசினை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் வாயுக்கள் அளவினை கண்டறியும் வகையில் புதிதாகக் கண்டறிந்துள்ள சிறிய வகை செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளார். கோடிக்கணக்கில் செலவிட்டு தயார் செய்யப்படும் செயற்கைக்கோள்களுக்கு மத்தியில், மாணவர் ஜெயபிரகாஷ் சாமானிய மக்களின் நிலைக்கு ஏற்ப ஆயிரம் ரூபாயில் செயற்கைக்கோளின் அனைத்து செயல்பாடுகளை செய்து முடித்ததே இதன் முக்கிய அம்சம்.

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு ஜெயபிரகாஷ் அளித்த பிரத்யேக பேட்டியில், "காற்றில் உள்ள மாசின் அளவை கண்டறிய வேண்டும். ஆனால் ராக்கெட் மூலம் சேட்டிலைடை விண்ணுக்கு அனுப்பி அதிலிருந்து கண்டறிவதற்கு மிக அதிக செலவுகள் ஏற்படும். விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களுக்காகச் செலவிடப்படும் செலவினை விட மிகமிகக் குறைந்த செலவில் அமைந்துள்ளது நான் உருவாக்கியுள்ள சிறிய வகை செயற்கைக்கோள். இதனை ஹீலியம் பலூன் மூலம் முதலில் முப்பதாயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்து காற்று மாசு அளவை கண்டறிந்து விட முடியும்.

தொழிற்சாலை மாசு அளவை அடிக்கடி கண்காணித்தால் மட்டுமே சரியான மாசு அளவை கண்டறிய முடியும். முதல் முறை பரிசோதனை செய்தபிறகு பலூன் மட்டுமே மாற்ற வேண்டியதாக இருக்கும். இதற்கான குறைந்தபட்ச செலவு 2 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே ஆகும். தொழிற்சாலைகளில் ஆய்வு நடைபெறும் போது தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு காற்று மாசு அளவை குறைத்துக் காட்டப்படுவது இனி நடக்காது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய ஜெயபிரகாஷ், இவற்றையெல்லாம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டறிவதற்கு, தொடர் காற்று மாசு அளவை கண்காணிப்பதற்கும் என்னுடைய ஹீலியம் பலூன் செயற்கைக்கோள் ஆய்வு உதவிக்கரமாக இருக்கும். தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் குறைந்த செலவில் காற்று மாசினை கண்டறிந்து தொழிற்சாலைகளைக் கண்காணிக்கவும், காற்று மாசு அளவை கட்டுப்படுத்தவும் எனது கண்டுபிடிப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றுவதே என்னுடைய எதிர்கால கனவு. விஞ்ஞானியாக காற்று மாசினை தடுத்து மாசில்லாத உலகத்தை உருவாக்க நாட்டுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன்" என உணர்ச்சி பொங்கக் கூறுகிறார்.

என்னதான் கல்வி கைகொடுத்தாலும் நிதி கைகொடுப்பதில்லை. இதன் காரணமாகவே இன்றளவிலும் பலக் குழுந்தைகளின் கனவுகள் வெளிவராமல் இருக்கின்றது. இதைப்போல் பண வசதி இல்லாமல் ஸ்பான்ஷர்ஷிப் தேடும் ஜெயபிரகாஷின் கனவு சற்று வித்தியாசமானதே... அவருக்கு கிடைத்த ஆற்றலையும் திறனையும் மற்ற மாணவர்களும் அறிந்துகொள்ள முன்வருகிறார் ஜெயப்பிரகாஷ்.

"நான் பயிலும் பள்ளியில் கீரிபீன் ஏரோ ஸ்பேஸ் ( Griffon Aro Space) என்ற புதிய கிளப் ஒன்றை உருவாக்கியுள்ளேன். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறியச் செயற்கைக்கோள் செய்முறைகளையும், பயன்படுத்தும் கருவிகள் குறித்தும் வகுப்பெடுத்து வருகிறேன். இதன் மூலம் அப்துல் கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நினைவாக்க முடியும் என ஆழமாக நம்புகிறேன்" எனக்கூறுவது அனைவர் மத்தியில் மதிப்புமிக்க பாராட்டைப்பெற்றுள்ளது.

இதுகுறித்து பரணி கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தேசிய அறிவியல் மாநாட்டில் தங்கள் பள்ளியிலிருந்து அதிக மாணவ மாணவிகள் ஆய்வு படைப்புகளைச் சமர்ப்பித்து வருகின்றனர். அந்த வகையில் பிளஸ் டூ மாணவர் ஜெயபிரகாஷ் தயாரித்துள்ள சிறிய வகை ஹீலியம் பலூன் செயற்கைக்கோள், தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை மூலம் நடத்தப்படும் தேசிய அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக உருவாக்கியுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு மூத்த விஞ்ஞானிகள் ஆய்வுக்குப் பிறகு ஆலோசனைகளைப் பெற்று, பின்னரே பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். இது சம்பந்தமாகச் சமீபத்தில் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பெங்களூரு செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையைச் சந்தித்து மாணவர் ஜெயபிரகாஷ் சிறிய வகை செயற்கைக்கோள் பயன்கள் குறித்துக் கூறினார்.

அப்போது அவர் வழங்கிய ஆலோசனைப்படி, வெர்சன் 2 மினி செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறார் மாணவர் ஜெயபிரகாஷ். இதன் மூலம் அதிக தூரம் பயணித்து, காற்றுக்கு மாசு ஏற்படுத்தும் மற்ற வாயுக்களின் அளவையும் கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அதற்கு கல்வி நிறுவனம் உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவித்தார். ஜெயபிரகாஷ் போன்ற மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி அங்கீகரிக்கப்பட்டால், அறிவியல் கண்டுபிடிப்பில் 1930ல் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி ராமனுக்குப் பிறகு, இந்திய இளம் விஞ்ஞானிகளிலிருந்து அனைத்து விஞ்ஞானிகளின் பட்டியல் நீளும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிங்க: பயணிகளின் கவனத்திற்கு நாளை முதல் சென்னை விமான நிலையத்தில் முக்கிய மாற்றம்.. பின்னணி என்ன?

Last Updated :Nov 16, 2023, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.