கரூரில் பரபரப்பு.. களமிறங்கிய ஜோதிமணி.. மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போராட்டம்!

author img

By

Published : Nov 25, 2021, 6:57 PM IST

மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் எம்பி ஜோதிமணி போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா உபகரணங்கள் வழங்கும் முகாமை நடத்தக் கோரி பலமுறை வலியுறுத்தியும் முகாம் நடத்தாத மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரூர்: ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லாத உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாமினை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பலமுறை வலியுறுத்தியும் முகாம் நடத்தாத ஆட்சியரைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.25) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று மதியம் 12 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணியிடம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, இன்று முகாம் நடைபெற்று வருகிறது, நான் முகாமிற்கு தான் செல்கிறேன். தாங்கள் முகாமிற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். ஆனால் ஆட்சியரின் கோரிக்கையை ஏற்க மறுத்து போராட்டத்தை ஜோதிமணி தொடர்ந்தார்.

மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் எம்பி ஜோதிமணி போராட்டம்

நான் அனைவருக்குமான நிர்வாக அலுவலர்

செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரபுசங்கர், "கரூர் மாவட்டத்தில் நான்கு முகாம்கள் நடைபெற்று முடிந்துவிட்டன. இதன் தொடர்ச்சியாக இன்றும் முகாம் நடைபெற்று வருகிறது.

முகாமில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை, அரசியலும் இல்லை. நான் அனைவருக்குமான நிர்வாக அலுவலர்" என்று கூறிவிட்டு முகாமிற்கு புறப்பட்டு சென்றார்.

ஊழல் கறைபடிந்த அலுவலர் என விமர்சனம்

இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "எந்த ஆட்சியாக இருந்தாலும் ஊழல் கறைபடிந்த அலுவலர்களிடம் போராடித்தான் செயல்படவேண்டி உள்ளது.

கடந்த ஆட்சியின் போது நல்ல திட்டங்களை போராடித்தான் மக்களுக்கு கொண்டு செல்ல முடிந்தது. பலமுறை ஆட்சியரிடம் முகாம் நடத்த வலியுறுத்தியும், முகாம் நடத்த மறுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகிய என்னை மக்கள் பணி செய்ய விடாமல் ஆட்சியர் தடுத்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்.

நடைபெற்ற தவறை மாவட்ட நிர்வாகம் திருத்தி சமூக நலன் மற்றும் அதிகாரம் அளித்தல் நலத்துறை சார்பில் நடத்தப்படும் சிறப்பு மாற்றுத்திறனாளிகள் முகாமை கரூர் மாவட்டத்தில் நடத்த வேண்டும். அதற்கான தேதியை மாவட்ட ஆட்சியர் வழங்கும் வரை தர்ணா போராட்டத்தை கைவிடப்போவதில்லை.

பெயரளவிலான முகாம்

மாவட்ட ஆட்சியர் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், “மாநில அரசு இந்த முகாமை நடத்துவதற்காக முன்னெடுப்பு எடுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் நடத்திவரும் பெயரளவிலான முகாம்களில் 90 பேர் மட்டுமே பயனடைவர். இம்முகாம் குறித்து கிராமப்புறங்களில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்வதன் மூலமும் ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் முகாம் ஒன்றுக்கு ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர்" எனப் பதிலளித்தார்.

இந்தப் போராட்டத்தின் போது, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு ஆதரவாக மாவட்ட காங்கிரஸ் மகளிரணி தலைவர் உஷா, மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி, நகர தலைவர்கள் வெங்கடேஸ்வரன், பெரியசாமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: Delhi Air Quality: 'நவம்பர் 27க்கு பிறகு மீண்டும் சீராகும்' - காற்றின் தர முன்னெச்சரிக்கை அமைப்பு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.