ETV Bharat / state

கரூர் மாரியம்மன் திருவிழாவில் கும்மியாட்டத்தால் சாதி கலவரத்தைத் தூண்ட முயற்சி?

author img

By

Published : May 16, 2023, 10:45 AM IST

கரூர் மாரியம்மன் திருவிழாவில் சாதி கலவரத்தைத் தூண்ட முயற்சி என கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாரியம்மன் திருவிழாவில் கும்மியாட்டத்தால் சாதி கலவரத்தை தூண்ட முயற்சி?
கரூர் மாரியம்மன் திருவிழாவில் கும்மியாட்டத்தால் சாதி கலவரத்தை தூண்ட முயற்சி?

தேவேந்திரகுல இளைஞர் பாசறையைச் சேர்ந்த நிர்வாகி கோபிநாத் அளித்த பேட்டி

கரூர்: கரூர் மாநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழா, நேற்றைய முன்தினம் (மே 14) இரவு கம்பம் நடும் விழாவோடு தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறும் கரூர் மாரியம்மன் திருவிழா, வருகிற 31ஆம் தேதி கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வோடு முடிவடைகிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம், அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இதனிடையே, கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (மே 15) கரூர் நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், அனைத்து பூச்சொரிதல் கமிட்டி குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கரூர் நகர காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கலந்து கொண்டு விழாவை அமைதியாக நடத்துவது குறித்து நிபந்தனைகளை எடுத்துரைத்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரூர் மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம், கரூர் தேவேந்திரகுல இளைஞர் பாசறை நிர்வாகிகள் மனு ஒன்றினை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், “பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் திருவிழாவில் தேவேந்திர சமூகத்தினர் பாலம்மாபுரம் பகுதியில் இருந்து கம்பம் கொண்டு வந்து திருவிழாவுக்கு வழங்கி திருவிழா தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக திருவிழாவை கொண்டாடி வருவது கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருவிழாவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கொங்கு நடனக் குழுவை ஆட வைத்து, சாதி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெற்று வருவதால், மாரியம்மன் கோயில் திருவிழாவில் கொங்கு நடனக் குழு கும்மியாட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள பிற கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் கொங்கு நடனக் குழுவை வைத்து, கும்மியாட்டத்தை நடத்தி வருகின்றனர். அனைத்து சமூகத்தினரும் கொண்டாடி வரும் மாரியம்மன் திருவிழாவில் கொங்கு நடன கும்மியாட்டத்தை புகுத்தி, ஒட்டுமொத்த விழாவையும் சாதி விழாவாக சித்தரிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே, திருவிழா அமைதியாகவும், சமூக நல்லிணக்கத்துடனும் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து தேவேந்திரகுல இளைஞர் பாசறையைச் சேர்ந்த நிர்வாகி கோபிநாத் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பேட்டியில், “அனைத்து சமூகத்தினரும் கொண்டாடும் கரூர் மாரியம்மன் திருவிழாவில், குறிப்பிட்ட சமூகத்தின் பெருமையைப் பேசும் வகையில் கும்மியாட்டம் நடத்துவது, மற்ற சமூகத்தினரியே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கடந்த முறை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்வின்போது, கொங்கு கும்மியாட்டக் குழுவினர் குறிப்பிட்ட சமூகத்தின் புகழ் பரப்பும் வகையில் நடந்து கொண்டது குறித்து எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம்.

கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அனைத்து சமூகத்தினரும் சமூக நல்லிணக்கத்தோடு வழிபடும் கரூர் மாரியம்மன் திருவிழாவை அமைதியாக நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரூரில் சாதியின் பெயரால் கலவரங்கள் நடைபெறுவதை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு.. விரக்தியில் கோயில் வளாகத்தில் பாலை கொட்டிய பக்தர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.