ETV Bharat / state

கெடு இருந்தும் மின் இணைப்பை துண்டித்த உரிமையாளர்.. கரூரில் வாடகை வீட்டு குடும்பத்தின் அவலம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 11:47 AM IST

Updated : Jan 9, 2024, 12:16 PM IST

கரூரில் வீட்டு உரிமையாளரின் மனிதாபிமானமற்ற செயலால் இருளில் தவிக்கும் குடும்பம்
கரூரில் வீட்டு உரிமையாளரின் மனிதாபிமானமற்ற செயலால் இருளில் தவிக்கும் குடும்பம்

Karur news: கரூரில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டணம் செலுத்த அவகாசம் இருந்த போதும், வீட்டு உரிமையாளர் மின் இணைப்பை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் வாடகை வீட்டு குடும்பத்தின் அவலம்

கரூர்: தான்தோன்றிமலை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் 6வது தெருவில் சிவகாமி, காளிதாஸ் தம்பதிக்கு சொந்தமாக மூன்று மாடி வீடு கட்டடம் உள்ளது. அந்த கட்டடத்தில் மூன்று குடும்பங்களை வாடகைக்கு குடியமர்த்தி, வருமானம் ஈட்டி வருகின்றனர். காளிதாஸ் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

அதேநேரம், பூங்கொடி மற்றும் அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர், தனது 11ஆம் வகுப்பு மகனுடன் கடந்த 8 மாதங்களாக, காளிதாஸ் தம்பதிக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு இருந்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் சிவகாமியின் வங்கி கணக்குக்கு, ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகையாக ரூபாய் 4,750 செலுத்தி வந்துள்ளனர்.

மேலும் பூங்கொடி, செல்வராஜ் குடியிருக்கும் வீட்டுக்கென தனி மின் இணைப்பு உள்ளது. இதற்கான இந்த மாத மின் கட்டணம் ரூபாய் 2,206 செலுத்த, ஜனவரி 18ஆம் தேதி கடைசி நாளாக உள்ளது. இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் ஜனவரி 5ஆம் தேதியே மின் இணைப்பின் பீயூஸ் கேரியரை பிடுங்கி, பூங்கொடியே மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என மின் இணைப்பை துண்டித்து உள்ளதாகத் தெரிகிறது.

இதனால் கடந்த மூன்று நாட்களாக 11ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் இரவு நேரத்தில், பள்ளிப் பாடங்களை படிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக நேற்று பூங்கொடி தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் புகார் அளித்த பூங்கொடி ஈடிவி பாரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகர் 6வது தெருவில் வாடகைக்கு குடியிருக்கும் தனக்கு, வீட்டின் உரிமையாளர் சிவகாமி காளிதாஸ், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் இருந்த போதும், உடனடியாக மின் கட்டணத்தை வழங்க மறுத்ததால் மின் இணைப்பை துண்டித்து விட்டார்.

இது தொடர்பாக தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணைக்கு அழைத்து வீட்டின் உரிமையாளரை மின் இணைப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், காவல்துறையின் கோரிக்கையை வீட்டின் உரிமையாளர் ஏற்க மறுத்து விட்டார். மேலும் வீட்டின் உரிமையாளர் தன்னை வீட்டை காலி செய்ய வேண்டும் என கூறுவதால், குடும்பத்துடன் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பதாகவும்” கூறினார்.

இதனைத் தொடர்ந்து, போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், பூங்கொடி குடும்பத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இரவு 11 மணிக்கு மேல் குடியிருக்கும் வீட்டின் முன்பு பூங்கொடி தனது குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போதும் பெண்மணியின் கோரிக்கையை கல்லூரிப் பேராசிரியரும், அவரது மனைவியும் ஏற்க மறுத்துள்ளனர்.

இது குறித்து, கல்லூரி பேராசிரியர் மனைவி சிவகாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “மின் கட்டணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரம் வழங்க முடியும்” என கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தார். சிறிது நேரத்திற்கு பின் நிருபர்களின் செல்போன் எண்ணுக்கு பேசிய சிவகாமி தரப்பு வழக்கறிஞர், நீதிபதியின் தம்பி எனக் கூறி, நிருபர்களிடம் மிரட்டும் தொனியில் பேசி செய்தியை வெளியிடக் கூடாது என மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க: கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கு; 4 பேரின் ஜாமீன் ரத்து!

Last Updated :Jan 9, 2024, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.