ETV Bharat / state

’திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறைக்கப்படும்’ - திருச்சி சிவா

author img

By

Published : Mar 30, 2021, 11:34 AM IST

திருச்சி எம்.பி. சிவா  திருச்சி எம்.பி. சிவா தேர்தல் பரப்புரை  திருச்சி சிவா  Trichy Siva  Trichy MP Siva  DMK MP Trichy Siva election campaign  DMK MP Trichy Siva election campaign In Karur  DMK MP Trichy Siva
DMK MP Trichy Siva election campaign

கரூர்: திமுக ஆட்சி அமைந்ததும் பெட்ரோல், டீசல், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். குளித்தலை திமுக சட்டப்பேரவை வேட்பாளர் மாணிக்கத்தை ஆதரித்து நெய்தலூர் பகுதியிலும், கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து புலியூர் பாலவிடுதி பகுதியிலும் அவர் வாக்கு சேகரித்தார்.

தொடரந்து நேற்று (மார்ச்.29) மாலை அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோவை ஆதரித்து ஈசநத்தம் கடைவீதியில் பரப்புரையைத் தொடங்கி, பள்ளப்பட்டி ஷா கார்னர் பகுதியில் இஸ்லாமிய பெருமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் நின்று உரையாற்றி அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "கரோனா தடுப்பு காலத்தில் வேலை இழந்துள்ள கூலித் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால் தமிழ்நாடு அரசு வெறும் ஆயிரம் ரூபாய் வழங்கியது.

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்காயிரம் ரூபாய் வழங்குவோம். எனது மகள் மருத்துவராக இருக்கிறார். ஊரடங்கு காலத்தில் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றினார். எனது பேத்தியை அவர் வாகனத்தில் இருந்தபடியே பார்த்து விட்டு செல்வார்.

அந்த அளவுக்கு கரோனா தடுப்பு பணியில் குடும்பத்தைப் பிரிந்து மருத்துவர்கள் சிறப்பாக உயிர்காக்கும் சிகிச்சை அளித்தனர். அந்த இக்கட்டான காலகட்டத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல் துறையினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்துவோம்.

திமுக போன்ற இயக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை திறமையாகக் கையாண்டு, எதிர்கொண்டு இருப்பார்கள். தற்போது கரோனா மீண்டும் பரவத் தொடங்கி உள்ளதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இந்தியாவில் விற்கப்படுகிறது. காரணம் பெட்ரோல், டீசல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது எனக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அவ்வாறு வாங்கப்படும் கச்சா எண்ணெய் காங்கிரஸ் கட்சியின் மன்மோகன்சிங் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பீப்பாய் ஒன்று 143 டாலருக்கு வாங்கப்பட்டது. உலக அளவில் தற்போது கச்சா எண்ணெய் 58 டாலராகக் குறைந்துள்ளது.

பொதுக்கூட்டத்தில் பேசும் திருச்சி சிவா எம்.பி.

ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிக விலைக்கு விற்கப்படும். அதற்கு காரணம், மத்தியில் ஆளும் பாஜக அரசும் மாநில அரசும் கலால் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை விதித்து, பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவுக்கு அருகே உள்ள இலங்கையில் பெட்ரோல் 50 ரூபாய்க்கும், பாகிஸ்தானில் 51 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால், சரக்கு கட்டணம் உயர்ந்து விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் இந்தியாவில் பெட்ரோல் 95 ரூபாய்க்கும் டீசல் 71 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 250 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே தான் எதிர்வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற்று, பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் லிட்டருக்கு நான்கு ரூபாயும் மானியமாக வழங்குவோம், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 500 ரூபாய் மானியமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

அதேபோல பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வோம். விலைவாசி உயர்வை மெல்ல மெல்ல பொது மக்களாகிய உங்களுக்கு சுமை ஏறாமல் கட்டுக்குள் கொண்டுவருவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’தலையாட்டி பொம்மை அதிமுக அரசின் இலவசங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை’ - பிருந்தா காரத் பிரத்யேக நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.