ETV Bharat / state

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகள்.. அரசின் நடவடிக்கை என்ன?

author img

By

Published : Jun 28, 2023, 10:12 PM IST

Updated : Jun 28, 2023, 10:51 PM IST

Etv Bharat கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகள்
Etv Bharat கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகள்

கரூர் எஸ்பி அலுவலகத்தில் சாதிய தீண்டாமை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு புகார் அளித்தவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக கரூர் எஸ்பியிடம் புகார்கள் குவிந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும் என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகள்.. அரசின் நடவடிக்கை என்ன?

கரூர்: குளித்தலை அருகே உள்ள பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர், ராஜலிங்கம் மகன் பிரசாந்த் (19). இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த செம்பாறை கொல்லப்பட்டி பழனிசாமி என்பவரின் மகள் பிரியதர்ஷினி (19) என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால், ஆத்திரத்தில் பெண்ணின் உறவினர்கள் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஊருக்குள் புகுந்து கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாகத் தாக்கி, சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக கூறப்படுகிறது.

இதில், படுகாயம் அடைந்த பிரசாந்த் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரிடம் சம்பவம் தொடர்பாக குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் எட்டு பேர் மீது ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், பெண்ணின் உறவினர் சதீஷ்குமார் அளித்தப் புகாரின் அடிப்படையில், காதல் திருமணம் செய்த பிரசாந்த் உள்ளிட்ட அவரது உறவினர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் கண்ணதாசன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

பட்டியலின சமூகத்தினர் மீது பொய் வழக்குப்பதிவு: இதனைத் தொடர்ந்து பிரசாந்தின் தங்கை கூறுகையில், ''எனது அண்ணன் காதல் திருமணம் செய்தார் என்பதால் ஊருக்குள் புகுந்து கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்கச் சென்ற என் கையை முறித்து, சாதிப் பெயரைச் சொல்லி ஊருக்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கையை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என வேதனைத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய தமிழ்ப் புலிகள் கட்சியின் நிர்வாகி கண்ணதாசன் கூறுகையில், ''காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பட்டியலின சமூகத்தினர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் துறை காதல் திருமணம் செய்த பிரசாந்த் மீதும் அவரது உறவினர்களான முருகேசன், குமரேசன், நாகராஜ் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில், ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மற்றொருவர் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இதில், ஒருவர் வியாபாரத்துக்காக வெளியூர் சென்று உள்ளார். காவல் துறையினர் தீண்டாமை வன்கொடுமை வழக்கை முறையாகப் பதிவு செய்து விசாரிக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனைத் திரும்ப பெற வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்: இதே போல, அரவக்குறிச்சி அருகே உள்ள தாளப்பட்டி கூலிநாய்க்கனூர் அருந்ததியர் குடியிருப்பில் புகுந்து இளைஞரைத் தாக்கியவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த ஜூன் 27ஆம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து, ஆதித்தமிழர் கட்சியின் தொழிலாளர் அணி துணைச் செயலாளர் துரை அமுதன் கூறுகையில், ''கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூலிநாய்க்கனூர் காலனி பகுதியில் ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவின் போது, ஒலிபெருக்கி அமைத்த அதே பகுதியைச் சேர்ந்த கோபால் நாயக்கர், ஒலிபெருக்கி பொருட்களை எடுத்துச் செல்வதற்காக சென்றபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலினை இளைஞர் ஸ்ரீதர் என்பவர் கோபால் நாயக்கர் மீது இடித்திருக்கிறார். இதனால், கோபால் அந்நபரை சாதி பெயரைச் சொல்லி திட்டி, தாக்கியிருக்கிறார்.

இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அன்று இரவே கோபால் தூண்டுதலின் பேரில், கோபாலுக்கு ஆதரவாக கேத்தம்பட்டி, ஜல்லிவநாய்கனூர், மணல்மேடு, கொக்கம்பட்டியைச் சேர்ந்த கோபாலின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்ரீதரின் (27) வீடு புகுந்து சாதிப் பெயரைச் சொல்லி திட்டி, சரமாரியாகத் தாக்கினர்.

தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை: இதில், படுகாயமடைந்த, ஸ்ரீதர் அவசர ஊர்தி மூலம் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஸ்ரீதர் அளித்தப் புகார் அடிப்படையில் ஜூன் 26ஆம் தேதி அரவக்குறிச்சி காவல் துறையினர் கோபால் நாயக்கர் (50) மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூலிநாயக்கனூர் அருந்ததியர் குடியிருப்பில் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை அரவக்குறிச்சி காவல் துறை ஒரு நபர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக கூடி, பட்டியலின மக்களின் குடியிருப்புப் பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்திய கும்பல் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

குற்றவாளிகளைத் தப்பிக்கவிடும் காவல் துறை: தொடர்ந்து பேசிய அவர், ''இதேபோல, கரூர் மாவட்டத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகள், கரூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படாமல், மற்ற சாதாரண வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றம் செய்பவர்கள் தண்டிக்கப்பட்டால் குற்றங்கள் குறையும். ஆனால், காவல் துறை இதுவரை வழக்குகள் பதிவு செய்யாமல் சம்பந்தப்பட்டவர்களைத் தப்பிக்க விடுவதால், தீண்டாமை வன்கொடுமைகள் நாளுக்கு நாள் கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற வழக்குகளை தனிக்கவனம் எடுத்து காவல் துறை பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆதித்தமிழர் கட்சியின் கரூர் மாவட்டச்செயலாளர் பசுவை பாரதி தலைமையில் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள குருணீயூர் அருந்ததியர் குடியிருப்பில் வசித்து வரும் ராஜேந்திரன் குமரவேல் (34) என்ற இளைஞர் மீது நடத்தப்பட்ட சாதி வெறித் தாக்குதல் சம்பவத்திற்கு பாலவிடுதி காவல் துறையினர் குமரவேல் மீது ஜூன் 21ஆம் தேதி பொய் வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து, கோரிக்கை மனுவினை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜூன் 26ஆம் தேதி வழங்கினார்.

தீண்டாமை வன்கொடுமை புகார்கள் மீது சமரசம்: இது குறித்து ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பசுவை பாரதி கூறுகையில், ''கரூர் மாவட்டத்தில் காவல் துறை வன்கொடுமை வழக்குகளை முறையாகப் பதிவு செய்யாமல் சாதாரண வழக்குகளாகப் பதிவு செய்வதுடன் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து தீண்டாமை வன்கொடுமை புகார்கள் மீது சமரசம் மேற்கொண்டு வருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் குளித்தலை பாலவிடுதி அரவக்குறிச்சி காவல் நிலையங்களில் தீண்டாமை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்குகள் பதிந்து இருப்பதாக கரூர் எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை காட்டுகின்றன.

திராவிட மாடல் அரசுக்கு நிச்சயம் அவப்பெயர்: கரூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தீண்டாமை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் புகாரை பெற்றுக்கொண்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவது சமூக செயல்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தீண்டாமை வன்கொடுமை புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், திராவிட மாடல் அரசுக்கு நிச்சயம் அவப்பெயர் ஏற்படும் என தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீஸ்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!

Last Updated :Jun 28, 2023, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.