ETV Bharat / state

வடமாநில தொழிலாளர்களின் விநாயகர் சிலை குடோனுக்கு சீல்... கொதித்தெழுந்த அண்ணாமலை.. மாவட்ட நிர்வாகம் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 11:54 AM IST

Updated : Sep 16, 2023, 1:02 PM IST

.வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வட மாநிலத்தவர்கள்
.வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வட மாநிலத்தவர்கள்

கரூரில் ரசாயன வேதிப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் செய்யப்பட்டதாக வடமாநில தொழிலாளர்களின் குடோனுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அடுத்த வேளை உணவிற்கு கூட பணம் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக வட மாநில தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து வெளியிட்டு உள்ளார்.

கரூர்: தமிழகம் முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி வெகு விமர்சையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தூய்மையான களிமண்ணால் செய்யப்பட்டு ஆறுகளில் கரைக்க ஏதுவாக எவ்வித ரசாயன கலப்பும் இல்லாத வகையில் தயாரிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.

இந்நிலையில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சுங்க கேட் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் கடந்த நான்கு மாதங்களாக விநாயகர் சிலையை விற்பனைக்காக தயார் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 14 வியாழக்கிழமை மாலை விநாயகர் சிலைகள் ரசாயனம் கலந்து தயாரிக்கப்படுவதாக பெறப்பட்ட புகார் அடிப்படையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் சோதனையிட்டு 250க்கும் மேற்பட்ட சிலைகளை விற்பனை செய்யக்கூடாது, எனவும் சோதனை அறிக்கை வந்தவுடன், சிலைகளை விற்பனை செய்யலாம் எனவும் கூறி குடோனுக்கு சீல் வைத்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று (செப்.15) விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் வழங்கிய நபர்கள் சீல் வைக்கப்பட்ட இடத்திற்கு வந்து குறித்த நேரத்தில் சிலைகள் வழங்கப்பட வேண்டும் என கூறி வட மாநில சிலை தயாரிப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வட மாநிலத்தவர்கள்: இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரித்து வரும் வடமாநில தொழிலாளி சத்ர ராம் (இந்தி மொழியில்) கூறுகையில், "கரூர் சுங்க கேட் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறேன்.

இந்த ஆண்டு வரும் திங்கட்கிழமை நடைபெறும் விநாயகர் சதுர்த்திக்கான ஆர்டர்கள் பெறப்பட்டு, சிலை தயாரிப்பு பணிகள் செய்து வந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீரென சீல் வைத்து விட்டனர். இந்த வேலையை நம்பி கடந்த நான்கு மாதங்களாக மூலப் பொருட்கள் வாங்கி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 12 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்தார்.

தொடர்ந்து சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சத்ர ராமின் மனைவி சுக்கியா என்பவர் கூறுகையில், "நாங்கள் கடந்த 10 வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகிறோம். கடந்த 8 மாதங்களாக, விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளோம். ஆனால் ஒரு முறை கூட இதை பற்றி எங்களிடத்தில் யாரும் கூறவில்லை.

அரசு அதிகாரிகளின் திடீர் நடவடிக்கையால், வட்டிக்கு பணம் வாங்கி செய்த சிலைகளை விற்க முடியாமல் சுமார் 10 லட்ச ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் குடும்பத்தினர் அடுத்த வேளை உணவிற்கு கூட பணம் இல்லாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

அண்ணாமலை கண்டனம்: இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "பண்டிகைக் காலங்களை நம்பி பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்வாதாரத்தை திமுக சீர்குலைக்கிறது. சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதாரத்தையும் திமுக தடுத்து நிறுத்துகிறது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஊழல் திமுக அரசின் இந்த அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டு உள்ளார்.

  • By disrupting the business of people dependent on the outcomes our festivities offer, DMK is not only hurting the feelings of the practitioners of Sanatana Dharma but also stopping the multiplier effect in the local economy.

    With Vinayagar Chaturthi a few days away, this… pic.twitter.com/DcMWMydyIJ

    — K.Annamalai (@annamalai_k) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம்: இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தனது x தளத்தில் கூறியிருப்பதாவது, "மத்திய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களில் விநாயகர் சிலைகள் செய்யப்படுவதாக, மண்பாண்ட தொழிலாளர்கள் மூலமாக வந்த புகாரின் அடிப்படையில் தான் அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

  • The news is factually incomplete and twisted. The truth is as follows -
    It has been repeatedly directed by various Honble High Courts, NGT & CPCB that idols made for Vinayak Chaturthi shall be strictly made of biodegradable items. Materials like POP are strictly forbidden. https://t.co/Da5hXN5YhW pic.twitter.com/H9ESPuxKZq

    — Collector Karur (@CollectorKarur) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் சிலை தயாரிப்பில் ஈடுபடக் கூடாது என தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அதனை மீறும் வகையில் அப்பகுதியில் சிலைகள் செய்யப்பட்டதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வடமாநில தொழிலாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வண்ணம் வருகிற 25ஆம் தேதி அனைத்து சிலைகளும் திரும்ப ஒப்படைக்கப்படும். அரசு அறிவுறுத்தியபடி களிமண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களில் தயார் செய்யப்பட்ட சிலைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்" என பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: Vijayalakshmi Withdraw Compliant Against Seeman: "அவரை ஒன்றும் செய்ய முடியாது... நான் பெங்களூரு செல்கிறேன்.." - நடிகை விஜயலட்சுமி!

Last Updated :Sep 16, 2023, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.