ETV Bharat / state

தீபாவளி பண்டிகை எதிரொலி : கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை! ரூ.1.17 லட்சம் பறிமுதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 8:39 PM IST

Anti corruption police raid in karur Registrar Office: கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ 1.17 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகம்
அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகம்

கரூர்: கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி, வேலாயுதம்பாளையம், வெள்ளியணை, நங்கவரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் தினந்தோறும் பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது. சார்பதிவாளர் அலுவலக இடைத்தரகர்கள் பலர் அங்கு பணியாற்றும் சார்பதிவாளர்களுக்கு லஞ்ச பணம் பரிமாறுபவர்களாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி சார் பதிவாளர் அலுவலகங்களில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கரூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி (பொறுப்பு) இமயவரம்பன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது சார்பதிவாளர் சக்திவேல் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத பணத்தின் விவரங்கள் குறித்து, டி.எஸ்.பி இமயவரம்பன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் சக்திவேலிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள இடைத்தரகர்களையும், அதிகாரிகளையும் தொடர்ந்து கண்காணித்து ஊழலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: காவிரி நீர் பங்கீடு முறைப்படுத்தாவிட்டால் திமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.