ETV Bharat / state

கரூரில் லஞ்சம் கேட்ட வருவாய் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது - வருவாய் ஆய்வாளருக்கு வலை!

author img

By

Published : Mar 7, 2023, 9:26 PM IST

கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி வசூலின்போது 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியதாக டீக்கடை உரிமையாளரை கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Anti
Anti

கரூர்: கரூர் மாநகராட்சியில் வருவாயை உயர்த்துவதற்காக மண்டல வாரியாக 5 இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை வரி வசூல் செய்யப்படுகிறது. இந்த வரி வசூல் மையங்களில் சொத்து வரி, குடிநீர் வரி, காலி மனை வரி, பாதாள சாக்கடை வரி, கடை வாடகை வரி மற்றும் மாநகராட்சிக்கு செலுத்தும் தொழில்வரி ஆகியவை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கரூர் காந்திகிராமம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முகாமில் வரி செலுத்துவதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் சென்றுள்ளார். அதன் பேரில், கரூர் மாநகராட்சியில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர் குழந்தைவேல் மற்றும் அவரது உதவியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மாணிக்கவாசகத்தின் வீட்டை பார்வையிட்டு வரி அளவீடு செய்து கூறியுள்ளனர்.

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை கூடுதலாக இருந்ததால், மாணிக்கவாசகத்திடம் வரியை குறைத்து கணக்கிட்டு தருவதாகவும், அதற்காக 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக தரும்படியும் இவர்கள் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணிக்கவாசகம், கரூர் - ஈரோடு சாலையில் இயங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் அறிவுரைப்படி, லஞ்ச பணத்தை வழங்குவதாக மாணிக்கவாசகம் கூறினார். அப்போது, குழந்தைவேல் மற்றும் ரவிச்சந்திரன் இருவரும், லஞ்சப் பணத்தை காந்திகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் டீக்கடை உரிமையாளர் பாலாஜியிடம் கொடுத்துவிடும்படி கூறியுள்ளனர்.

இதையடுத்து, கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நடராஜன் மற்றும் ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புக் குழுவினர், காந்திகிராமம் பகுதியில் உள்ள டீக்கடை பகுதியில் மறைந்திருந்தனர். பிறகு மாணிக்கவாசகத்திடமிருந்து வருவாய் உதவியாளர் ரவிச்சந்திரன் லஞ்சப் பணத்தை வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புக்குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர், கரூர் மாநகராட்சி வருவாய் உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த டீக்கடை உரிமையாளர் பாலாஜி இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் ஆறு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர் விசாரணை நடத்தினர்.

இதனிடையே மாநகராட்சி வரி வருவாய் ஆய்வாளர் குழந்தைவேல் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. வருவாய் உதவியாளரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் வரி வசூல் செய்யும் மையங்களில் அதிக வரி விதிப்பதாக புகார்கள் எழும் நிலையில், அந்தந்த மண்டல வரி வருவாய் ஆய்வாளர்ளை கண்காணிக்க வேண்டும் என கரூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நுண்துளை சிகிச்சை மூலம் பக்கவாதத்தில் இருந்து மீண்ட இளைஞர் - மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சு. பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.