ETV Bharat / state

கன்னியாகுமரியில் வந்தே பாரத் வாராந்திர ரயில் சேவை துவக்கம்..! பயணிகள் உற்சாகம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 9:05 PM IST

Kanyakumari Vande Bharat
கன்னியாகுமரியில் வந்தே பாரத் வாராந்திர ரயில் சேவை துவக்கம்

Kanyakumari Vande Bharat: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு 9.மணி நேரத்தில் சென்றடையும் வந்தே பாரத் வாராந்திர ரயில் சேவை இன்று நாகர்கோவில் இருந்து துவங்கப்பட்டது.

கன்னியாகுமரியில் வந்தே பாரத் வாராந்திர ரயில் சேவை துவக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வழியாகவும் சென்னைக்கு தினமும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆனாலும், ரயிலில் முன்பதிவு செய்து டிக்கெட் கிடைக்காததால் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து அரசு மற்றும் ஆம்னி பஸ்களை பயன்படுத்தி வருகின்றன. இதனால் கன்னியாகுமரியில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட மக்கள் மற்றும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கு நாடு முழுவதும் பொது மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்ததையும் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததையும் அடிப்படையாக வைத்து மத்திய அரசு இந்த திட்டத்திற்கு முக்கியத்துவத்தை அளித்தது.

இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அண்மையில் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி
ஜனவரி மாத்தின் முதல் வியாழக்கிழமையான இன்று (ஜன.04) மதியம் சுமார் 2:50 மணி அளவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து எட்டு கோச்சுகளுடன், நாகர்கோவில் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவக்கப்பட்டது.

இந்த ரயில் சேவை வியாழக்கிழமை காலை 5:15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2:10 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். பின்னர் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2:50 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை இரவு 11:45 மணிக்குச் சென்றடைகிறது.

வழக்கமாக செல்லும் ரயில்கள் 13 மணி நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்றடைகிறது. ஆனால் வந்தே பாரத் ரயில் 9 மணி நேரத்தில் சென்னை சென்றடையும் வகையில் அதிவேகத்தில் செல்கிறது. இந்த ரயிலில் 8 ஷேர் கார் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரயில் நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய ரயில்வே நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலில் நாகர்கோவில் இருந்து சென்னை செல்வதற்கு டிக்கெட் கட்டணமாக ரூ.1,605 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பயணிகள் சிலர் கூறும் போது, "அதிக வரவேற்பு பெற்ற இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். அதே போன்று இந்த ரயில் இரவு 11:45 மணி அளவில் சென்னை சென்றடைகிறது இதனால் சென்னை சென்றடையும் பயணிகள் நள்ளிரவில் வீடுகளுக்குச் சென்று சேர்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதால், இரவு 10 மணிக்குள் இந்த ரயில் சென்னை சென்று அடையும் வகையில் அட்டவணையை மாற்ற வேண்டும். அதே போன்று சாதாரண மற்றும் ஏழை மக்களும் பயணிக்கும் அளவில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: நடிகர் விஜயை நோக்கி காலணி வீசிய விவகாரம்: கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.