ETV Bharat / state

அலையாத்தி காடுகளைப்பெருக்க அரசு சார்பில் 2ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!

author img

By

Published : Jul 27, 2022, 2:54 PM IST

அலையாத்தி காடுகளை பெருக்க அரசு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
அலையாத்தி காடுகளை பெருக்க அரசு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

'அலையாத்தி காடுகளைப்பெருக்க அரசு சார்பில் இன்று 2ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கைப்பேரிடரில் இருந்து கடற்கரைப் பகுதி மக்களைக்காக்க இயற்கைத்தடுப்புச்சுவர் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி தான் அதிக அளவு வனப்பரப்பு கொண்ட மாவட்டம். வனப்பகுதிகளை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடல் அரிப்பைத் தடுக்கும் இயற்கைச்சூழலை உருவாக்கும் அலையாத்தி காடுகள் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி கழிமுகத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இதனால் இந்தப்பகுதிகளில் ஏராளமான பறவைகள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துள்ளது. மேலும் கடல் அரிப்பு என்பது தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அலையாத்தி காடுகளை பெருக்க அரசு சார்பில் இன்று 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் இந்தப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு இந்த அலையாத்தி காடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவ மாணவிகளும் இந்தத்திட்டத்தில் பங்கேற்கும் வண்ணம் அவர்களும் மரக்கன்றுகள் நட்டனர்.

பின்னர், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், 'குமரி மாவட்டம் மணக்குடி பகுதியில் இயற்கையாகவே ஏராளமான சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. இதனை அதிகரிக்கும் நோக்கில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்பகுதியில் சீமைக்கருவேல மரம் அதிக அளவில் இருந்தது. அதனை எடுத்துவிட்டு முழுவதுமாக சதுப்பு நில காடுகள் உருவாக்கத்திட்டமிட்டு அதனை தற்போது செயல்படுத்தி வருகிறோம்.

சுமார் 70 ஏக்கர் கொண்ட சதுப்பு நிலத்தில் 40 விழுக்காடு காடுகளை உருவாக்கிவிட்டோம். எதிர்வரும் காலத்தில் சுமார் 10,000 கன்றுகள் நடுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். குமரி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் இயற்கைத்தடுப்பு அரணாக செயல்படும் அலையாத்தி காடுகளை உருவாக்க முடியும் என ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.

அந்த வகையில் கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கைப்பேரிடர்களில் இருந்து கடற்கரைப்பகுதி மக்களைக்காப்பாற்ற இயற்கை தடுப்புச்சுவர் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மணக்குடி உள்ளிட்டப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலாப்பொழுதுபோக்கு மேம்பாட்டுப்பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத்தெரிவித்துள்ளார்.

அலையாத்தி காடுகளைப்பெருக்க அரசு சார்பில் 2ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!

இதையும் படிங்க: சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் 3 சதுப்பு நிலங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.