குமரியில் விமான நிலையமா? - மத்திய அமைச்சர் பதில்

author img

By

Published : Sep 15, 2022, 6:05 PM IST

’குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கலாம்...!’ - ஒன்றிய அமைச்சர் வி.கே சிங்

குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்தால், அதற்கு இடமும் ஒதுக்கினால் நிச்சயம் அமைக்கப்படலாம் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி: பாரதிய ஜனதா கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று(செப்.15) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”2004ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீரை இணைக்கும் வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் சாலை பணிகள் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் தென்கோடியையும் வடகோடியையும் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டது. ஆனால் இடையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. உள்ளூர் அரசியல் மற்றும் பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. இதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பணிகள் தொடங்கப்பட்டு துரிதப்படுத்தப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே நரிக்குளத்தில் உள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இந்த பாலத்திற்காக நாட்டப்பட்ட கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சேதப்படுத்தி உள்ளனர். இது ஒரு ஒழுக்கமற்ற செயலாகும்.

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு சாலை பணிகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டு தற்போது வேலைகள் நடைபெற்று வருகிறது. காவல்கிணறு - களியக்காவிளை வரை உள்ள நான்கு வழிச் சாலை பணிகள் தற்போது மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. சாலை பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நான் தொடர்பு கொண்டு பேசினேன். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாநில அரசு மற்றும் மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தால் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டால் விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுவரை 65 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகள் இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும். கோவாவில் ஜனநாயக முறைப்படியே எல்லாம் நடைபெற்று வருகிறது” இவ்வாறு அவர் கூறினார். பேட்டி போது முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ,எம். ஆர்.காந்தி எம்எல்ஏ மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.