ETV Bharat / state

குமரி-கேரள எல்லையில் கர்ப்பிணி உள்பட 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு!

author img

By

Published : Jul 9, 2021, 5:09 PM IST

zika virus
ஜிகா வைரஸ்

கன்னியாகுமரி, கேரள எல்லையில் கர்ப்பிணி ஒருவர் உள்பட 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி: ஜிகா வைரஸ் கொசுக்கள் மூலமாக பரவும். காய்ச்சல், உடலில் சிவப்புப் புள்ளிகள் ஏற்படுவது போன்றவை இந்த வைரஸின் அறிகுறிகள். முதலில் கேரளாவில் ஜிகா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு-கேரள எல்லையான செறுவாகோணம் பகுதியைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்ததால், டெங்கு, சிக்கன் குனியா, கரோனா உள்ளிட்டவைகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், மேற்கூறிய எவ்வித நோய்த்தொற்றும் உறுதி செய்யப்படவில்லை.

ஜிகா வைரஸ் பாதிப்பு

இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், கோயம்புத்தூரில் உள்ள ஆய்வகத்திற்கு அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பெண்ணின் உறவினர்கள், அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், 13 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செறுவாகோணம் பகுதியில் 30க்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களே உஷார்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வைரஸ் பாதிப்பு மேற்கொண்டு பரவாமல் தடுக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை, கன்னியாகுமரி - கேரள எல்லைப் பகுதிகளான பாறசாலை, இடைக்கோடு போன்ற பகுதிகளில் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஏடிஸ் என்னும் ஒருவகை கொசுவினால் பரவும் இந்த ஜிகா வைரஸ் இரவை விடவும், பகலில் அதிகம் தாக்கும். இந்த வைரஸ் பாதித்த கர்ப்பிணியின் மூலம், அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஜிகா வைரஸ் பரவும்.

பரவும் வேறு வழிகள்: ஜிகா வைரஸ் பரவியவரின் ரத்தத்தை வேறு ஒருவருக்கு செலுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்றவை இந்த வைரஸ் பரவ வழி வகுக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 15 பேருக்கு ஜிகா வைரஸ்... பீதியில் கேரள சுகாதார ஊழியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.