பேச்சிப்பாறை-திற்பரப்பு அருவி வரை மரங்களை வெட்ட தடைக்கோரி வழக்கு

author img

By

Published : Aug 25, 2021, 9:36 PM IST

Madurai HC

கோதையாற்றில் பேச்சிப்பாறை அணை முதல் திற்பரப்பு அருவி வரை உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை : கோதையாற்றில் பேச்சிப்பாறை அணை முதல் திற்பரப்பு அருவி வரை உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையைச் சேர்ந்த டேவிட்தாஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் அரபிக்கடலில் கலக்கிறது.

மரங்கள் வெட்டும் பணி தொடக்கம்

பேச்சிப்பாறை அணையிலிருந்து, கோதையாறு அரபிக்கடலில் கலப்பதற்கு இடையே ஆரல்வாய்மொழி- நெடுமங்காடு பாலம், பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் பாலம், சக்கரபாணி - அஞ்சுகண்டறை பாலம், ஒரு நடக்க பாலம் என 4 முக்கிய பாடங்கள் உள்ளன.

இந்நிலையில் ஆற்றை அளக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. கடலுக்கு நீர் செல்லும் பாதையில் இருக்கும் மரங்கள் தடையாக உள்ளது என தவறான முடிவு எடுக்கப்பட்டு பொதுப்பணித் துறையினரால் மரங்களை வெட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு

பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு 115 ஆண்டுகள் ஆன நிலையில் தண்ணீர் இயல்பாகவே கடலில் கலந்து வருகிறது. இதுபோல மரங்களை வெட்டி கடலுக்கு தண்ணீரை அனுப்ப வேண்டுமென எவ்விதமான கோரிக்கையும் வைக்கப்படவில்லை.

இந்த உத்தரவு எவ்விதமான முன் யோசனையும் இன்றி, நிபுணர்களின் ஒப்புதல் இல்லாமல், அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவாகும். ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.

கோரிக்கை

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செப்டம்பர் 2ஆம் தேதி அப்பகுதிகளில் உள்ள 910 மரங்களையும் வெட்டி வேரோடு அகற்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கோதையாற்றில் பேச்சிப்பாறை அணை முதல் திற்பரப்பு அருவி வரை உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து, அந்த மரங்களை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு, " மரங்களின் நன்மைகள் குறித்து தெரிந்தும் அதனை வெட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பது ஏன்? எனக் கேள்வியெழுப்பினார்கள்.

மேலும் இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : ’வீணாகும் மூங்கில் மரங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ - பழங்குடியின மக்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.