ETV Bharat / state

குமரியில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா; திரளி இலையில் கொழுக்கட்டை.. சூடுபிடிக்கும் அகல் விளக்குகள் விற்பனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 11:04 AM IST

குமரியில் விற்பனைக்கு குவிந்த அகல் விளக்குகள் மற்றும் திரளி இலைகள்
குமரியில் விற்பனைக்கு குவிந்த அகல் விளக்குகள் மற்றும் திரளி இலைகள்

Karthigai Deepam festival: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரியில் விற்பனைக்காக வந்து குவிந்துள்ள விதவிதமான அகல் விளக்குகள் மற்றும் திரளி இலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

குமரியில் விற்பனைக்கு குவிந்த அகல் விளக்குகள் மற்றும் திரளி இலைகள்

கன்னியாகுமரி: கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில், ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை தீப விழா இன்று (நவ.26) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்கள் மற்றும் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வார்கள். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருக்கார்த்திகை தீப விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.

இந்த நிலையில், கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விசுவரூப தரிசனம் போன்றவை நடைபெற்றது. பின்னர் இன்று மாலை 4 மணியளவில், குமரி கடல் நடுவே அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாறையில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேல்சாந்தி தனி படகில் சென்று, கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து, இரவு பகவதி அம்மன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தம் நிகழ்வும் நடைபெறவுள்ளது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. மேலும், நாகர்கோவில் நாகராஜா கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி கிருஷ்ண சுவாமி கோயில், பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள், பீங்கானால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் சந்தைகளில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. அகல் விளக்குகளில் மயில், அன்னம், விநாயகர் என பல்வேறு வடிவங்களில் உள்ள அகல் விளக்குகள் 10 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாகர்கோவிலில் வடசேரி, கோட்டார் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் சாலை ஓரங்களில் கார்த்திகை விளக்குகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மக்கள் ஆர்வமாக அவற்றை வாங்கிச் சென்றனர். இதேபோல் குமரி மாவட்டத்தில், கார்த்திகை மாதத்தில் திரளி இலையில் தயாரிக்கப்படும் கார்த்திகை கொழுக்கட்டை விஷேசமானதாகும். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இலை, கொழுக்கட்டையின் சுவையையும், மணத்தையும் மேலும் அதிகரிக்கும்.

இந்நிலையில், திரளி இலையும் விற்பனைக்காக வந்து உள்ளன. கார்த்திகை தீப விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் அகல் விளக்குகள், திரளி இலை விற்பனை சூடுபிடித்து உள்ளது.

இதையும் படிங்க: கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.