ETV Bharat / state

ஆடி அமாவாசை சிறப்பு பூஜை வழிபாடுகள்: தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகள்.!

author img

By

Published : Aug 16, 2023, 10:52 PM IST

Etv Bharat
Etv Bharat

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்கள் குடும்பங்களில் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பூஜை வழிபாடு செய்தனர்.

ஆடி அமாவாசை சிறப்பு பூஜை வழிபாடுகள்: தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகள்.!

கன்னியாகுமரி: ஆடி அமாவாசையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் அமாவாசை நாள் இந்துக்களின் முக்கிய விரத நாளாக கருதப்படுகிறது.

இந்த நாட்களில் மக்கள் நீர்நிலைகளில் நீராடி தங்கள் குடும்பங்களில் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பூஜை வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும் நிலையில், இரண்டாவது அமாவாசையான இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சிறப்பு பூஜை வாழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த நாளில் முன்னோர்களை வணங்கி கருப்பு எள், அரிசி, சாத உருண்டைகள், தர்ப்பை, சந்தனம், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட பொருட்களால் முன்னோர்களுக்கு படைத்ததாக நினைத்து பூஜைகள் செய்து, பின்னர் அந்த சாதம் அடங்கிய இலையோடு தலையில் வைத்து சுமந்து தர்ப்பணம் செய்தால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும், குடும்பமும், சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மக்கள் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதிகாலை முதலே கடலில் வந்து நீராடிய மக்கள் திதி கொடுத்து தர்பனமும் செய்தனர். இதேபோல் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகாலை முதலே தர்பனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

தஞ்சை: இதேபோல ஆடி அமாவாசையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருவையாறு, காவிரி ஆறு புஷ்பமண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். தஞ்சை மாவட்டம் மட்டும் இன்றி பிற மாவட்டங்களான அரியலூர், திருவாருர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் புஷ்பமண்டப படித்துறையில் புனித நீராடினார்கள்.

திருச்சி: அதேபோல, காவிரி கரைகளின் திதி கொடுக்கும் இடங்களில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பிரசித்தி பெற்றது. இங்கு ஆடி அமாவாசை தினத்தையொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்து, காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபாடு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி: ஆடி அமாவாசையையொட்டி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு செய்தனர். நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பலர் அங்கு வருகை தந்து, எள், அரிசி மாவு உள்ளிட்டவற்றை வைத்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து, வைகை ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், சூரிய பகவானை வழிபட்டும் சிறப்பித்தனர். பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலமான இந்த கோயிலுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்து வழிபாடு மேற்கொண்டனர்.

தருமபுரி: அதேபோல, தருமபுரி மாவட்டத்தின் சுற்றுலாத்தலத்தில் முக்கிய சுற்றுலாத்தலமும், ஆன்மீகத் தலமமான தீர்த்தமலை தீர்த்த கிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்த மக்கள் முன்னோர்களுக்காக திதி கொடுத்து வழிபாடு செய்தனர். மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு நடந்தே வந்த பக்தர்கள், மலை உச்சியில் உள்ள தீர்த்த நீரில் நீராடி வழிபாடு செய்தனர்.

தூத்துக்குடி: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் எள், அன்னம் கொண்டு வேத மந்திரங்களை முழங்கி தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டனர். தொடர்ந்து கோயில்களுக்குச் சென்ற பக்தர்கள் சிறப்பு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: ஆடி அமாவாசை:அலைமோதிய மக்கள் கூட்டம்.. நிரம்பி வழிந்த காவிரி ஆறு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.