ETV Bharat / state

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயில் விழா - துப்பாக்கியேந்தி மரியாதை செய்த போலீஸ்

author img

By

Published : Sep 22, 2022, 4:17 PM IST

Etv Bharat நங்கை அம்மன் கோயில் விழா
Etv Bharat நங்கை அம்மன் கோயில் விழா

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து அம்மன் விக்ரகம் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி, தமிழ்நாடு - கேரள மாநில துப்பாக்கியேந்திய காவல் துறையினர் மரியாதையுடன், பேண்ட் வாத்தியங்கள் முழங்க முத்துக்குடைகளுடன் ஊர்வலமாகப் புறப்பட்டது.

கன்னியாகுமரி: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் - முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து அம்மன் விக்ரகம் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி தமிழ்நாடு - கேரளா ஆகிய இரு மாநில காவல்துறையின் துப்பாக்கியேந்திய போலீசாரின் மரியாதையுடன் பேண்ட்வாத்தியங்கள் முழங்க முத்துக்குடைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டது. ஏரளமான பக்கதர்கள் சாமி தரிசனம் செய்து வழியனுப்பி வைத்தனர்.

நவராத்திரி விழா வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் செல்வது வழக்கம்.

அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் சாமி சிலைகளை வைத்து பூஜைகள் செய்வர். பத்து நாள்கள் விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்குக் கொண்டு வரப்படும்.

ஆனால், கடந்த இரு ஆண்டுகள் கரோனா காரணமாக பிரமாண்டமான ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் எளிதான முறையில் சாமிசிலைகள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. அதனை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு - கேரள இரு மாநில காவல் துறையினர் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையும் நடந்தது. அதன்பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோயில் சார்பாக திருக்கண் சாத்தி வழிபாடு நடந்தது.

நங்கை அம்மன் கோயில் விழா

தொடர்ந்து ரதவீதிகளில் அம்மன் வீதி உலா வந்தது. ஆஸ்ரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக தக்கலை அருகே உள்ள பத்பநாபபுரம் அரண்மனையை இன்று சென்றடைகிறது.

பின்னர் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய விக்ரங்கள் பல்லக்கு வாகனத்திலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

செல்லும் வழி எங்கும் பக்தர்கள் பூ பழங்களுடன் நின்று சுவாமி விக்ரகங்களை தரிசனம் செய்து வழிஅனுப்பி வைக்கும் மன்னர்கள் கால பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெறும்.

இதையும் படிங்க: காந்தியடிகள் அரையாடை விரதம் பூண்ட மதுரையில் தொடங்கிய ‘அகிம்சை சந்தை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.