ETV Bharat / state

குமரியில் அன்னாசிப்பழம் விளைச்சல்; மலைக்கிராமங்களுக்கு படையெடுக்கும் யானைகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 6:13 PM IST

Etv Bharat
Etv Bharat

Kanyakumari Elephant: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மலைக்கிராமங்களில் கூட்டமாக படையெடுத்துள்ள காட்டு யானை கூட்டம் மலைவாழ் மக்கள், ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். சமீபத்தில் ஈன்ற குட்டிகளுடன் அன்னாசி வாழை போன்ற விளைப்பொருட்களை சேதப்படுத்தி வருவதைத் தடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சில யானைகள் நடமாட்டம் இருந்து வந்தது இந்த யானைகள் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட திடல், கடுகரை, காட்டுப்புத்தூர் போன்ற மலை அடிவாரங்களில் உள்ள வாழை தோட்டங்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வந்தன. இதனை அடுத்து வனத்துறையினரும் அப்பகுதி பொதுமக்களும் யானைகளை விரட்டி காட்டிற்குள் அனுப்பினர்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக கோதையாறு வனப்பகுதியில் உள்ள மோதிர மலை, கோதமடக்கு, குற்றியாறு போன்ற பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வர துவங்கியுள்ளன. இதில் சமீபத்தில், ஈன்ற நான்கு குட்டிகளுடன் யானை கூட்டங்கள் அப்பகுதியில் சுற்றி வருகின்றன. மேலும், இந்த யானை கூட்டங்கள் வாகனங்கள் நடமாடும் சாலைகளிலும் அலைந்து திரிந்து வருவதால், அரசு மற்றும் பல்வேறு தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் குறிப்பாக, கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சபரிமலை சீசன் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் பத்தனம்திட்டை, ரானி உள்ளிட்ட வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் யானைகள் கூட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளான கோதையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள தச்சமலை, முடவன் பொற்றை, மோதிர மலை உட்பட 18-க்கும் மேற்பட்ட மலைப்பகுதிகளுக்கு படையெடுத்து வருவது வழக்கம்.

இந்த பகுதியில், மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமம். இந்த யானைகள் மலையோர பகுதிகளில் பயிரிடப்பட்டிருக்கும் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அரசு ரப்பர் தோட்டங்களில் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களை யானைகள் தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. இதேபோல், தற்போது மீண்டும் கேரளா வன பகுதிகளில் இருந்து கோதையாறு மலையோர கிராமங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக படையெடுத்துள்ளன.

குறிப்பாக, இரவு நேரங்களில் பேச்சிப்பாறை, கோதையாறு சாலையில் யானைகள் கூட்டமாக நிற்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், அரசு ரப்பர் தோட்டங்களில் புதிய ரப்பர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு ஊடுபயிராக அன்னாசிப்பழம் பயிரிடப்பட்டு உள்ளதால் அன்னாசிப்பழ மணத்தில் கவரப்பட்டு யானைகள் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உள்ளது.

ஏற்கனவே, கடந்த இந்த சபரிமலை சீசன் மாதங்களில் அரசு ரப்பர் தோட்டத்தில், பால் வடிக்கச் சென்றப் பெண் தொழிலாளியை யானை மிதித்து கொன்றது. இந்நிலையில், தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் மீண்டும் யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்து வருவதால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மலைவாழ் மக்கள் மற்றும் ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், வனத்துறையினர் இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா இன்று (நவ.3) கூறும்போது, 'தென்மேற்கு பருவமழை காலங்களில் யானை கூட்டங்கள் வழக்கமாக, கேரளா வனப்பகுதிகளில் சுற்றித் திரிவது வழக்கம். இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால், புல், செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் அவற்றை உணவுக்காக யானைகள் தேடிவருவதும் உண்டு.

தற்போது, பேச்சிப்பாறை முதல் கோதையார் வரை யானைகள் நடமாடி வருவதாக கூறப்படும் பகுதி, யானைகளின் வழித்தடங்கள் என்ற பட்டியலில் உள்ள பகுதிகளில் மட்டுமே அவை உலா வந்து கொண்டு இருக்கின்றன. முன்னர் ரப்பர் தோட்டங்களில் வாழை ஊடுபயிராக போடப்பட்டு இருந்ததால், அவற்றை உண்ண யானைகள் வரும். ஆனால் தற்போது, வாழைகளுக்குப் பதிலாக அன்னாசி பழங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளன. அதன் காரணமாகவும் யானைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதேநேரம், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வராமல் இருக்க வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மற்றபடி, யானைகள் அவற்றின் வழித்தடங்களில் மட்டுமே நடமாடி வருகின்றன. குறிப்பிட்ட சீசன் முடிவடைந்ததும் இந்த யானைகள் இடம் பெயர்ந்து விடுவது வழக்கம். எனினும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு யானை வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்' என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் தம்பதி வெட்டிக் கொடூர கொலை... பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.