இது என்னடா புது டெக்னிக்கா இருக்கு..உறவினர் போல வீடு புகுந்த பர்தா கொள்ளையர்கள்.

author img

By

Published : May 27, 2023, 6:26 PM IST

வீடு புகுந்து திருடும் பர்தா கொள்ளையர்கள்

நாகர்கோயில் அருகே உறவினர் வீட்டுக்கு வந்து செல்வது போல பர்தா அணிந்த ஐந்து கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து நகையை திருடும் போது கூச்சலிட்டதால் பொருட்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

கன்னியாகுமரி மாவட்டம்: அண்மை காலமாக வீடு புகுந்து கொள்ளையடிப்பது, கோயில் உண்டியலை உடைத்துக் கொள்ளையடிப்பது, வழிப்பறி என கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாக உள்ளது. சமீபத்தில் சாமியார் வேடம் அணிந்தும், குறி சொல்வதை போல வந்தும் வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் அதிகம் நடமாட தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் தற்போது பர்தா கொள்ளையர்கள் நடமாட துவங்கி உள்ளனர். நாகர்கோவிலில் இடலாக்குடி, காதர் ஆசாத் நகர், வேத நகர், இளங்கடை மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதில் வேத நகர் பகுதியில் உள்ள பாத்திமா தெருவில் வசித்து வருபவர் உமர் பாபு. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது வெளியில் யாருக்கும் சந்தேகம் வராத படி உறவினர்கள் வீட்டிற்கு வந்து செல்வது போல இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா அணிந்து 5 பேர் வந்து உள்ளனர்.

இஸ்லாமிய பெண் போல் பர்தா அணிந்து வேடமிட்டு இருந்த ஐவரில் 4 பேர் ஆண்கள். ஒருவர் மட்டும் பெண். வீட்டினுள் நுழைந்த இவர்கள் உமர் பாபுவை கயிற்றால் கட்டி வைத்து உள்ளனர். பின் வீட்டிலிருந்து 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டிருக்கையில் மருத்துவமனைக்கு சென்ற உமர்பாபுவின் மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென வந்து உள்ளனர்.

அவர்கள் கொள்ளையர்களை பார்த்து “திருடன் திருடன்” என்று கூச்சலிட்டுள்ளனர். உடனே அந்தக் கொள்ளையர்கள் தங்கள் கைகளில் இருந்த அரிவாள், துப்பாக்கி, டார்ச் லைட் போன்றவற்றை போட்டு விட்டு ஐந்து பேரும் தப்பி வெளியில் ஓடியுள்ளனர். மேலும் தாங்கள் வந்த கேரளா பதிவு என் கொண்ட காரில் ஏறி தப்பிக்க முயன்ற போது கார் அருகாமையில் உள்ள சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

உடனே காரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து கோட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று பகல் இவர்கள் இப்பகுதியில் நடமாடிய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் அவர்கள் வந்த காரினை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர். அப்போது காரின் நம்பர் பிளேட் மேல் வேறு நம்பரை ஒட்டி உள்ளதும் தெரியவந்தது. இதனை தொடந்து அந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த பர்தா கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தபடும் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

மக்கள் அதிகமாக வாழும் நெருக்கடி மிகுந்த பகுதியில் உறவினர் போல வீடு புகுந்த பர்தா கொள்ளையர்கள், கொள்ளையடிக்க சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பகலில் சமோசா விற்பனை... இரவில் பைக் திருட்டு... கூட்டாளியுடன் சிக்கிய சிறுவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.