ETV Bharat / state

வடிவேலு பட காமெடி பாணியில் வத்தல் பொடி தூவி 100 சவரன் நகை, பணம் கொள்ளை!

author img

By

Published : May 16, 2023, 8:41 AM IST

நாகர்கோவில் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வடிவேலு காமெடி பாணியில் வத்தல் பொடி தூவி 100 சவரன் தங்கம் கொள்ளை
வடிவேலு காமெடி பாணியில் வத்தல் பொடி தூவி 100 சவரன் தங்கம் கொள்ளை

நாகர்கோவில் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே இராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதிபுரத்தில் நிதி நிறுவனம் மற்றும் வெளிநாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் நடத்தி வருபவர், முருகன் (47). இவரது நிதி நிறுவனமும், வீடும் ஒரே வளாகத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி மாலை குடும்பத்துடன் முருகன் சென்னை சென்றுள்ளார்.

இதனையடுத்து, நேற்று (மே 15) காலையில் முருகனின் உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து அவர் இராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சோதனை செய்ததில் பீரோவில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் கொள்ளை அடித்தவர்கள் காவல் துறையிடம் சிக்காமல் இருப்பதற்காக, வீடு முழுவதும் வத்தல் பொடியைத் தூவிச் சென்றுள்ளனர். இதனால் தடயங்களைச் சேகரிப்பதில் காவல் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் கன்னியாகுமரியில் கொலை, கொள்ளை வழிப்பறி மற்றும் முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் ஆகியவை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் பிரபலமான ஒரு துணிக் கடையில் துணிகளைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, காவல் துறையினர் இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் விதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காரில் வந்து செயின் பறிப்பு முயற்சி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.