ETV Bharat / state

TTF Vasan Accident : வீலிங் செய்யும் போது ஏற்பட்டதா விபரீதம்..? டிடிஎப் வாசனுக்கு என்னாச்சு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 7:42 AM IST

ttf-vasan-bike-accident-
TTF Vasan Accident

பிரபல யூடிபாரான டிடிஎஃப் வாசன் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் அருகே பைக்கில் சென்றபோது அவரது வாகனம் விபத்துக்குள்ளானது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்ற அவர் பைக்கை வீலிங் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் அவரது கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சாகச முயற்சியின் போது டிடிஎப் வாசனின் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானதாக வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள டிடிஎப் வாசனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், டிடிஎப் வாசனை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎப் வாசனுக்கு, லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி, தன்னைப் பின்தொடர்வோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்த மீட்-அப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போலீசார் எச்சரிக்கும் அளவுக்கு அது சென்றது. அவரது அழைப்பை ஏற்று வந்த ஆயிரக்கணக்கானோரில் பலரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது இவர் சாலையில் பயணம் செய்து சர்ச்சையில் சிக்குவார். போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்து, எச்சரித்து அனுப்புவது வழக்கமான கதையாக மாறி வருகிறது. கடந்த ஜூன் மாதம் அவரது பிறந்தநாள் அன்று அவர் நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

மணிக்கு 299 கிலோ மீட்டர் வேகத்தில் படப்பிடிப்பு என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வீலிங் செய்யும் முயன்ற போது ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதால் மஞ்சள் வீரன் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என படக்குழு தரப்பில் தகவல் கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கல் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வழங்கிய இஸ்லாமியர்கள் - கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.