ETV Bharat / state

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

author img

By

Published : Aug 16, 2022, 9:48 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிதாக அமையவுள்ள பசுமை வெளி விமான நிலையம் தொடர்பாக இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்புக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விமான நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியம், பரந்தூரில் புதிதாக அமைய உள்ள பசுமை வெளி விமான நிலையம் தொடர்பாக கருத்து கேட்புக்கூட்டம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.

முன்னதாக இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் வட்டத்தில் வளத்தூர், பரந்தூர், நெல்வாய், தண்டலம், பொடவூர், மடப்புரம், தொடூர் என 7 வருவாய் கிராமங்களும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி ஆகிய 6 கிராமங்கள் என 13 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் அமைச்சர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வராததாலும், கிராமங்கள் வாரியாக நடத்தப்படும் கருத்து கேட்புக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரு கிராமத்தில் இருந்து ஐந்து நபர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்தும், விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பெரு வாரியாக பல கிராம மக்கள் இக்கூட்டத்தை புறக்கணித்து விட்டு ஆவேசத்துடன் வெளிநடப்பு செய்திருந்தனர்.

அதன் பின் சுமார் 2 மணி நேர காலதாமதத்திற்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெருவாரியான கிராம மக்கள் பங்கேற்காமல் ஒரு சில கிராம மக்களே பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்திற்கு வந்திருந்த வளத்தூர், நெல்வாய் உள்ளிட்ட ஒரு சில கிராமப்பொதுமக்களிடம் அமைச்சர்கள் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக குறைகள் மற்றும் கருத்துகளைக் கேட்டறிந்து பதிவு செய்தனர்.

அப்போது அக்கிராம பொதுமக்கள், தங்களின் விளை நிலங்கள், குடியிருப்பு இடங்களுக்கான இழப்பீட்டுத்தொகை குறித்தும், தங்களுடைய வாழ்வாதாரம், மாற்று இடம் குறித்தும் கேட்டனர். ஆனால், தற்சமயம் அதுகுறித்தான முறையான தகவல்களை அளிக்க முடியாது என்றும் அரசுக்கு நிலம் தேவை என்றால் அதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்வோம், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு கிராம பொதுமக்கள், தமிழ்நாடு அரசு முறையான முடிவுகளை தெரிவிக்காமல் தங்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் என்ற பெயரில் ஒரு கிராமத்திற்கு ஐந்து பேர் என நடத்துவது சரியில்லை என்றும், கிராமங்கள் வாரியாக அனைத்து கிராம மக்களிடமும் நேரடியாக சென்று கருத்து கேட்புக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும், தங்களுடைய வாழ்வாதாரம், இழப்பீட்டுத்தொகை, மாற்று இடம் உள்ளிட்ட அனைத்து விதமான முடிவுகள் குறித்தும் பாதிக்கப்படும் கிராம மக்களுக்கு தெரிவித்த பின் அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

மேலும் எவ்வித வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகள் இன்றி வாழ்ந்து வருபவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது, எங்களது குடியிருப்பு, விளை நிலங்கள், வாழ்வாதாரத்தை அழித்து விமான நிலையம் அமைப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம் எனத்தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி மன்றக் குழுத்தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் ஐந்து வயது குழந்தையிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.