ETV Bharat / state

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு மாற்றிடத்தில் வகுப்புகள் தொடங்கும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

author img

By

Published : Jul 20, 2022, 5:35 PM IST

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு மாற்றிடத்தில் வகுப்புகள் துவங்கும் - பள்ளி கல்வித் துறை அமைச்சர்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு மாற்றிடத்தில் வகுப்புகள் துவங்கும் - பள்ளி கல்வித் துறை அமைச்சர்

கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாற்றிடத்தில் பாடம் நடத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் 101 ஜமீன் தண்டலம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் கலை பண்பாட்டு கொண்டாட்டம் தொடக்க விழா 2022-23, பள்ளி கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்தார்.

அதன் பின் நடைபெற்ற பாரதிதாசன் பாடல், மாணவர்களின் குழுப்பாட்டு, நடனம், பொம்மலாட்டம் மற்றும் நாட்டுப்புற கலைவடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைப்பண்பாட்டினரின் நாடக நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்களோடு அமைச்சர் கண்டு மகிழ்ந்து, மாணவ-மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார். அதன் பின் இவ்விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றி பேசுகையில், ’கடந்த ஆறு ஏழு மாதங்களில் சுமார் இரண்டு லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைத்திருப்பது, இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய பெருமை. இந்த சமுதாயத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டமோ அதனை மீண்டும் இச்சமுதாயத்திற்கே செலுத்துகின்ற வகையில் பல திட்டங்கள் பள்ளி கல்வித்துறையில் கொண்டு வர இருக்கின்றோம். முதலமைச்சர் சொன்னது போல பள்ளி மாணவர்கள் தங்களது முழுக்கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிக்கையில், ’கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைத் திறக்க வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். பள்ளி விவகார வழக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வரும் 29ஆம் தேதி நீதிமன்றம் கூடுவதாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே அப்பள்ளி அருகே உள்ள 5 அரசுப்பள்ளி, 17 தனியார் பள்ளிகளிலும், மேலும் தனியார் கல்லூரியிலும் 40 வகுப்பறைகள் காலியாக உள்ளன. அங்கு கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்திட வகுப்பு தொடங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு சுற்றறிக்கை 2 அல்லது 3 நாள்களில் வெளியிடப்படும்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 5 நாட்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் தனியார் தொண்டு நிறுவனம், சமூக நலத்துறை, காவல்துறை உள்ளிட்டவர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என 5 குழுக்களாகப் பிரிந்து ஆலோசனை வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு மாற்றிடத்தில் வகுப்புகள் தொடங்கும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக்குழுவைப்போன்று தனியார் பள்ளிகளிலும் அதனை செயல்படுத்தினால் அது பெற்றோர் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அத்தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.ஏழிலரசன், மாவட்ட ஊராட்சி மன்றக் குழுத் தலைவர் படப்பை ஆர்.மனோகரன், தமிழிசை நடனக்கலைஞர் மற்றும் மாநில திட்டகுழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ், தண்டலம் ஊராட்சி மன்றத்தலைவர் சசிகுமார், துணைத்தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: மாணவர்கள் பற்றாக்குறையால் 40 அரசுப்பள்ளிகள் மூடல்; ஆர்.டி.ஐ-யில் கிடைத்த அதிர்ச்சித்தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.