ETV Bharat / state

வீடு கட்ட போலி பணி ஆணை தயாரித்த திமுக கிளைச் செயலாளர் கைது!

author img

By

Published : Apr 20, 2023, 9:41 PM IST

Etv Bharat
Etv Bharat

காஞ்சிபுரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியப் பணி ஆணையை போலியாக தயாரித்து பயனாளிகளை ஏமாற்றிய திமுக கிளைச் செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் தாமாகவே வீடு கட்டுவதற்கு பணி ஆணை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்குட்பட்ட சிறு மாங்காடு ஊராட்சி மன்றத் தலைவராகவும் ஸ்ரீபெரும்புதூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளருமாக சுபரஞ்சனி என்பவர் செயல்பட்டு வருகிறார்.

இவருடைய கணவர் கன்னியப்பன் (39) திமுக கிளைக் கழக செயலாளராக உள்ளார். இவர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்தவர். வாசு (38) என்பவர், திமுக பிரதிநிதியாக உள்ளார். இவருடைய மனைவி பிலோமினா ஐந்தாவது வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

கன்னியப்பன் மற்றும் வாசு ஆகிய இருவரும் சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாகப் பொறியாளரான அழகுபொன்னையாவை சந்தித்து, கடந்த 12ஆம் தேதி சிறு மாங்காடு கிராமத்தில் 19 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பணி ஆணை கோப்புகள் கொடுத்துள்ளார்கள்.

அவற்றை பொறியாளர் அழகு பொன்னையா ஆய்வு செய்ததில், அனைத்து பணி ஆணைகளும் போலியானது எனத் தெரியவந்தது. அதனையடுத்து பொறியாளர் அழகு பொன்னையா காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், தான் பணிக்கு சேர்ந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதியிலிருந்து இதுவரை சிறு மாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் தன்னால் வழங்கப்படவில்லை என்றும், ஆனால், தன்னுடைய பெயரில் பணி ஆணை போலியாக தயாரித்து பயனாளிகளிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளதாகவும், சிறுமாங்காடு கன்னியப்பன் மற்றும் வாசு ஆகியோர் மீது புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி, குற்றப்பிரிவு குற்ற எண் 6/2023 பிரிவு 465, 468, 471, 420 IPC உட்பட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கன்னியப்பன் மற்றும் வாசு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ''கலைஞர் ஆட்சியில் மூடை முடையாக அரிசி பருப்புகளை தூக்கிச் சென்றேன்'' - மாமூல் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.