ETV Bharat / state

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார்..! தொட்டியை இடித்துத் தள்ள ஆட்சியர் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 9:48 PM IST

காஞ்சிபுரத்தில் பள்ளிக் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த புகார்
காஞ்சிபுரத்தில் பள்ளிக் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த புகார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பள்ளி குடிநீர் தொட்டியில் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரத்தில் பள்ளிக் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்து உள்ள ஊரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏறத்தாழ 100 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்குப்படிக்கும் மாணவர்களுக்கான அந்தப் பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது.

மாணவ மாணவிகள் குடிநீர் அருந்தவும், அவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கவும் இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்துதான் தண்ணீர் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. வழக்கம்போல் இன்று (நவ. 21) மதிய உணவு தயாரிப்பதற்காக குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரைப் பிடித்து சமையலுக்கு பயன்படுத்த முயன்றுள்ளனர்.

அப்போது அந்தத் தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறிப்பிட்ட பள்ளியில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக கூறி அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வருவாய்க் கோட்டாட்சியர் ரம்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் ஆகியோர் அந்தப் பள்ளிக்கு விரைந்து குறிப்பிட்ட குடிநீர்த் தொட்டியை ஆய்வு செய்தனர். மேலும் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற அவர்கள், உதவித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சமையலர் உள்ளிட்டோரை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பிறகு செய்தியாளர்களைத் சந்தித்த மாவட்ட ஆட்சியர், திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்டதை மறுத்தார். பயன்படுத்தப்படாத அந்தக் குடிநீர்த் தொட்டியின் நீரை, பாத்திரங்கள் கழுவ மட்டுமே பயன்படுத்தி வந்ததாகவும், இன்று துர்நாற்றம் அடித்ததாகப் புகார் வந்ததால் தாங்கள் ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறு ஆய்வு மேற்கொண்டதில், அந்தக் குடிநீர்த் தொட்டியில் அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து போட்டடிருக்கலாம் என தாங்கள் நம்புவதாகவும், அதன் காரணமாகவே துர்நாற்றம் வீசியிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "அந்த பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர்த் தொட்டிகளில் குறிப்பிட்ட அந்தத் தொட்டி பயன்பாட்டில் இல்லாத ஒன்று.

தற்போது இந்த சம்பவத்திற்குப் பிறகு அதை இடித்துக் தள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், குறிப்பாக இளம் மாணவர்கள் அருந்தும் குடிநீரில் மலத்தைக் கலப்பது என்பது மனிதர்களாக பிறந்தவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடுமை ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேங்கைவயல் நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இத்தகைய குற்றச்செயல்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாகியிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் வேங்கைவயலில் மனிதநேயமற்ற குற்றத்தை நடத்தியவர்களை கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.