ETV Bharat / state

பட்டியலினத்தைச் சேர்ந்த ஆசிரியரை வலுக்கட்டாயமாக காலில் விழவைத்த கும்பல்!

author img

By

Published : Jan 22, 2021, 4:25 PM IST

ஆசியரியரை வலுக்கட்டாயமாக காலில் விழவைத்த கும்பல்
ஆசியரியரை வலுக்கட்டாயமாக காலில் விழவைத்த கும்பல்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரை பொது இடத்தில் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டையில் வசித்து வருபவர் வேல்முருகன். இவர், நெடுமானூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். இந்நிலையில் மாட்டு பொங்கலன்று இவர் வீட்டிற்கு முன்பாக மணல் கொட்டி வைத்துள்ளார்.

அந்த மணலை உடனடியாக அகற்றுமாறு அக்கிராமத்தின் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் கூறியுள்ளனர். இதில், ஆசிரியருக்கும் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆசிரியரை அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், ஆத்திரம் அடங்காத அந்தக் கும்பல் ஊர் பஞ்சாயத்து போன்று தெருவில் கூடி நின்று ஆசிரியரை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்து வந்து ஊர் பெரியவர்களின் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இதனால், மனமுடைந்த ஆசிரியர் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்துள்ளார்.

ஆசிரியரின் மனைவி சசிகலா தன் கணவரை பள்ளி ஆசிரியர் என்று பாராமல் பொது இடங்களில் தாக்கி காலில் விழவைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாயை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.