ETV Bharat / state

'கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்'

author img

By

Published : Nov 16, 2020, 9:35 PM IST

கள்ளக்குறிச்சி: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அரசின் 7.5 % உள்ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டளவில் இரண்டாம் இடம் பிடித்து கள்ளக்குறிச்சி மாணவன் சாதனை படைத்தார்.

anparasan
anparasan

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதில், பொதுப்பிரிவு தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு என தனியாக இடம் ஒதுக்கப்படும். நடப்பாண்டில் மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5 விழுக்காடு அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 405 மாணவர்கள் சேர தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கனவு எட்டாக்கனியாகவும், தாய்மொழியில் படித்தவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியாமல் போனது. இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளை வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள 7.5 உள் இடஒதுக்கீடு அரசு மாணவர்களின் மருத்துவக் கனவை உறுதிப்படுத்தியுள்ளது. சமூக நீதியை போற்றிட தமிழ்நாடு, மற்ற மாநிலங்களுக்கு எப்போதும் முன்னோடி என்பதே நிதர்சனம்.

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தேனியைச் சேர்ந்த ஜீவித் குமார் முதலிடத்திலும், கள்ளக்குறிச்சி மாணவர் அன்பரசன் இரண்டாம் இடத்திலும், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

அந்தவகையில், கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் அன்பு நகரைச் சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த சாமிதுரை - இந்திரா தம்பதியரின் மகன் அன்பரசன். இவர் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வந்துள்ளார்.

நடந்து முடிந்த நீட் தேர்வில் அன்பரசன் 720 மதிப்பெண்களுக்கு 644 மதிப்பெண்கள் பெற்று மருத்துவப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு அரசின் 7.5% உள்ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவன் அன்பரசனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்

இதுகுறித்து அன்பரசன் கூறியதாவது

"தனது வீட்டில் பெற்றோரும், பள்ளியில் ஆசிரியர்களும் அளித்த ஊக்கம் தான், நீட் தேர்வில் 646 மதிப்பெண்கள் பெற முடிந்தது. கடின உழைப்பு வெற்றிக்கு மிக முக்கியம்" என்றார்.

இதையும் படிங்க: பலத்த மழையால் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை வராது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.