ETV Bharat / state

காஷ்மீர் மொழியை அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.. யூசுப் தாரிகாமி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 12:07 PM IST

காஷ்மீா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யூசுப் தாரிகாமி
காஷ்மீா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யூசுப் தாரிகாமி

Kashmiri Language: மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு சட்ட பிரிவு 370-ஐ நீக்கிய போதுதான் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் தொடங்கியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் யூசுப் தாரிகாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கட்சியின் மூத்த தலைவா் மறைந்த என்.சங்கரய்யாவின் படத்திறப்பு மற்றும் பாலஸ்தீனம், காஷ்மீரில் நடப்பது என்ன? என்பது குறித்த கருத்தரங்கம் நேற்று (ஜன.6) நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், காஷ்மீா் மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான யூசுப் தாரிகாமி, கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பி.சம்பத், மாவட்டச் செயலாளா் ஆர்.ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், மத்தியக் குழு உறுப்பினரும், காஷ்மீர் மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான யூசுப் தாரிகாமி பேசியதாவது, “திராவிட மண், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவும், அரவணைப்பும் கொடுத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் தமிழ், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகள் இருந்தாலும், அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பது இந்தியர் என்ற அடையாளம். காஷ்மீர் மொழியை அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆங்கிலேயர்கள், மதத்தின் பெயரால் பிரிவினை செய்த நிலையிலும், இந்தியா ஒற்றுமையுடன் இருந்ததை இளைஞர்கள் மறந்து விடக்கூடாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது சட்டப்பிரிவை, காஷ்மீர் மக்களுக்கு அம்பேத்கர் உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் விவாதித்து இயற்றினர். காஷ்மீர் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் காக்க 370 சட்டப் பிரிவு உருவாக்கப்பட்டது. 370வது பிரிவு கொடுத்த பிறகுதான், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீா் இணைந்தது. மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியபோது காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் தொடங்கியது. இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் அச்சத்தில் வாழ்த்து வருகின்றனா்.

ஆனால், மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை தீர்க்காமல், ராமர் கோயில் மூலம் மத உணர்வை பயன்படுத்தி வருகிறது. ஆளுநர் ஆட்சியின் மூலம், காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு நிகழ்ந்தது போன்று, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நிகழாத வகையில் மக்கள் தற்போது விழித்துக் கொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.

இதையும் படிங்க: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: கோலாகலமான தொடக்க விழாவின் நேரலை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.