ETV Bharat / state

சமூகநீதியை இந்தியா முழுவதும் நிறைவேற்றியது மோடிதான் - எல். முருகன் பெருமிதம்

author img

By

Published : Aug 18, 2021, 9:42 AM IST

Updated : Aug 18, 2021, 11:37 AM IST

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பட்டியலினத்தைச் சேர்ந்த 12 பேரை மத்திய அமைச்சர்களாக்கி இருக்கிறார். சமூகநீதியை இந்தியா முழுவதும் நிலைநாட்டியது மோடிதான் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

எல். முருகன்
எல். முருகன்

ஈரோடு: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) கோவையில் மக்கள் ஆசி பெரும் யாத்திரையைத் தொடங்கி, அதன் ஒரு பகுதியாக நேற்று (ஆகஸ்ட் 17) மாலை ஈரோடு மாவட்டம் அரச்சலூருக்கு வந்து பொதுமக்களையும், பாஜக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்தார்.

அப்போது அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய எல். முருகன், "இந்த யாத்திரையை நடத்த வேண்டிய அவசியம் என்ன, ஏன் மத்திய அமைச்சர் மக்களிடத்தில் நேரடியாக வருகிறார், மக்களைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறார்கள்.

மக்களிடையே உரை நிகழ்த்தும் எல். முருகன்
மக்களிடையே உரை நிகழ்த்தும் எல். முருகன்

மரபுக்கு இடையூறாக இருந்த காங்., திமுக

நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இந்திய அரசியல் வரலாற்றில் சுதந்திரம் பெற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி, பட்டியலினத்தைச் சேர்ந்த 12 பேரை மத்திய அமைச்சர்களாக்கி இருக்கிறார். அதில் எட்டு பேர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதர பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) வகுப்பைச் சேர்ந்த 28 பேரை மத்திய அமைச்சரவையில் மோடி இணைத்துள்ளார்.

அதேபோல, அமைச்சரவையில் பெண்கள் 12 பேரை அமைச்சராக்கியுள்ளார். சமூகநீதியை இந்தியா முழுவதும் நிலைநாட்டியது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான். புதிய அமைச்சர்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைப்பது மரபு.

காலணி தைப்பவரின் மகனான என்னை அமைச்சராக்கியது மோடிதான் - எல். முருகன் உருக்கம்

அப்படி, பிரதமர் நரேந்திர மோடி - நான் உள்பட மற்ற புதியவர்களை அறிமுகம் செய்துவைக்கும்போது, ஏழை எளியோர், பட்டியலினத்தைச் சார்ந்தோர், பழங்குடியினர் அமைச்சர்களாகி இருப்பதால் அவர்களை அறிமுகம் செய்துவைக்கக் கூடாது என்ற நோக்கத்தில், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தித் தடுத்தார்கள்.

அதனால் உங்களிடத்தில் (மக்கள்) ஆசி வாங்க நேரடியாக வந்திருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.

அதேபோல், மற்றொரு இடத்தில் நடந்த யாத்திரை நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது, "இது ஒரு சரித்திர நிகழ்வு, 75 ஆண்டுகளிலேயே அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்த ஒரு மனிதருக்கு - எந்தவொரு அவையிலுமே உறுப்பினர் அல்லாத ஒரு மனிதருக்கு தனது அமைச்சரவையில் இடம் கொடுத்து நான்கு முக்கியத் துறைகளைக் கொடுத்துள்ளார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

அண்ணாமலை
அண்ணாமலை

'சமூக நீதி குறித்து பேச திமுகவினருக்கு தகுதியில்லை' - எல்.முருகன்

அமைச்சராகி தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக உங்களது ஆசிர்வாதத்தைப் பெற வருகைதந்துள்ளார். உங்களுக்குத் தெரியும் இதுதான் உண்மையான சமூகநீதி" என்றார். தொடர்ந்து பேசிய எல். முருகன், "நாமெல்லாம் நரேந்திர மோடிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். 75 ஆண்டுகளில் யாராவது அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கினார்களா?

எல். முருகன்
எல். முருகன்

முதன் முதலில் வழங்கியர் நரேந்திர மோடிதான்" எனக் கூறினார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பும்போது அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் எல். முருகனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்பொழுது நியாயவிலைக் கடைகளில் தரமற்ற பொருள்கள் பொதுமக்களுக்கு விநியோகிப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

தரமற்ற உணவுப் பொருள்களை விநியோகிக்காதீர்

இதனையடுத்து அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்ற எல். முருகன், அங்குள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களை ஆய்வுசெய்தார். அப்போது, தரமற்ற உணவுப் பொருள்கள் வந்தால் அவற்றை பொதுமக்களுக்கு விநியோகிக்காமல் திருப்பி அனுப்புமாறு கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற யாத்திரை நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஆண்டவனே நம்ம பக்கம் - அண்ணாமலை பஞ்ச்!

Last Updated : Aug 18, 2021, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.