ETV Bharat / state

காலணி தைப்பவரின் மகனான என்னை அமைச்சராக்கியது மோடிதான் - எல். முருகன் உருக்கம்

author img

By

Published : Aug 18, 2021, 6:38 AM IST

பட்டியலினத்தைச் சேர்ந்த என்னை மத்திய இணை அமைச்சராக்கியது பிரதமர் நரேந்திர மோடிதான் என எல். முருகன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

எல். முருகன் உரையாற்றுவது தொடர்பான காணொலி
எல். முருகன் உரையாற்றுவது தொடர்பான காணொலி

ஈரோடு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து, முதன்முறையாக அமைச்சரவை கடந்த ஜூலை 8ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட 43 பேர், மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக இருப்பினும், அவர்கள் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாகக் கருதப்படவில்லை. இந்நிலையிலேயே மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

எல். முருகன் உரையாற்றுவது தொடர்பான காணொலி

பட்டியலினத்துக்குப் பெருமை சேர்ப்பு

தற்போது தமிழ்நாடு முழுவதும் பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில், மக்கள் ஆசி யாத்திரையை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று (ஆகஸ்ட் 17) ஈரோடு மாவட்டத்தில் ஆசி யாத்திரையை மேற்கொண்டார்.

அப்போது ஈரோடு காளைமாட்டு சிலை அருகே எல். முருகனுக்கு, பாஜக மாநில நிர்வாகி விநாயக மூர்த்தி தலைமையிலானோர் பூரண கும்ப வரவேற்பு அளித்து வரவேற்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அவரை வரவேற்று உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் எல். முருகன் பேசுகையில், “பட்டியலினத்தில் பிறந்த என்னை பிரதமர் நரேந்திர மோடிதான் மத்திய இணை அமைச்சராக நியமித்துள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரானது, பட்டியலினத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது.

அமைச்சராக்கி அழகு பார்த்த மோடி

சாதாரண காலணி தைக்கும் தொழிலாளியின் மகனாகிய என்னை, அமைச்சராக்கி அழகு பார்த்தது பிரதமர் நரேந்திர மோடிதான்” என்றார். பின்னர் அங்கிருந்து கிளம்பி ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் எல். முருகன் பங்கேற்றார்.

முன்னதாக விழா மேடை அருகே இருந்த மதுரை வீரன் கோயிலில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், கார்வேந்தன் உள்ளிட்டோருடன் எல். முருகன் வழிபாடு நடத்தினார்.

இதையும் படிங்க: இந்தியர்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்துள்ள தாலிபன்கள்- சீக்கியத் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.