ETV Bharat / state

நிரந்தர பொதுச்செயலாளராக ஈபிஎஸ் வருவார் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

author img

By

Published : Mar 16, 2023, 5:49 PM IST

நிரந்தர பொதுச் செயலாளராக ஈபிஎஸ் வருவார் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!
நிரந்தர பொதுச் செயலாளராக ஈபிஎஸ் வருவார் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி இருக்கிறது எனவும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஈபிஎஸ் வரப்போகிறார் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

ஈரோடு: அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்டதாக திமுக அரசைக் கண்டித்து, ஈரோடு மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், இன்று (மார்ச் 16) ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகச்செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்ட கழகச் செயலாளருமான கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ''திமுக அரசு மக்களைப் பற்றி கவலைப்படாமல், தனது குடும்பத்தைப் பற்றி கவலைப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையமும் கூட்டணி சேர்ந்து கொண்டது. இந்திய அளவில் எங்கும் இல்லாத அளவிற்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களை பட்டி போட்டு அடைத்து வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இந்த அரசு, அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டவரை ஊக்கப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறது, இந்த அரசு. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் இந்த அரசு முடக்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள், தேர்தல் முடிந்த பின்னர் வேதனை அடையத் தொடங்கி உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய் வழக்குப் போட்டு, அதிமுகவை முடக்கி விடலாம் என்று நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. காற்றை சுவர் எழுப்பி தடுத்து விட முடியாது.

கடல் அலையை அணை கட்டி நிறுத்த முடியாது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை, இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதிமுக ஆலமரத்தைப்போல எழுந்து உள்ள இயக்கம். இதனை அசைத்துப் பார்க்க சிலர் நினைக்கின்றனர். ஆனால், ஒரு போதும் அதனை வீழ்த்த முடியாது. அவ்வாறு வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால், அவர்கள்தான் வீழ்ந்து போவார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலம் பொற்காலமாக அமையும்'' எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ''விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை, அவருக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டு வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம். ஒரு அரசு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு இது போன்ற செயலில் இனி ஈடுபடக் கூடாது.

அவ்வாறு ஈடுபட்டால் அதிமுகவில் உள்ள அத்தனை பேரும் எந்த தியாகத்தையும் செய்வோம். உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இவர்தான் (எடப்பாடி பழனிசாமி) அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் என்று. மேலும் நீக்கப்பட்டது அனைத்தும் செல்லும் என சொல்லி இருக்கிறது. எனவே, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் எடப்பாடி பழனிசாமி வரப்போகிறார்” என்றார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சினிமாவில் தான் ஹீரோ, அரசியலில் காமெடியன் தான் - உதயநிதியை வம்பிழுக்கும் டிடிவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.