ETV Bharat / state

Thangamani DVC Raid: புளூமெட்டல் பங்குதாரர்கள் வீடுகளிலும் ரெய்டு

author img

By

Published : Dec 15, 2021, 3:52 PM IST

மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அந்த வகையில், புளூ மெட்டல் நிறுவன பங்குதாரர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

minister thangamani home raid  past party corruption  Minsters partner added the raid  அதிமுக முன்னாள் அமைச்சர்  மின்சாரத் துறை ஊழல்  வருமான வரித்துறை சோதனை
அமைச்சரின் பங்குதாரர் வீட்டிலும் ரெய்டு

ஈரோடு: அதிமுகவைச் சேர்ந்த தங்கமணி கடந்த ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது அதிக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தங்க மணியின் வீட்டில் இன்று (டிசம்பர் 15) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

அதேபோல் அவருக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. சென்னை, நாமக்கல், ஈரோடு, கோவை உள்பட மொத்தம் 69 இடங்களில் சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதன் வரிசையில் கோபிசெட்டிபாளையத்தில், தங்கமணி பங்குதாரராக உள்ள இன்ப்ரா புளூ மெட்டல் பங்குதாரர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்துள்ளனர்.

அதன்படி கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள தயிர்பாளையம், பெரியபுலியூர் பகுதிகளில் இன்ப்ரா புளூ மெட்டல் நிறுவன பங்குதாரர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேலும் நாமக்கல்லில் தங்கமணிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது. அங்கு மொத்தம் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்துவருகின்றனர்.

தயிர்பாளையத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவரது வீட்டில் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள், ஆர்.ஐ., வி.ஏ.ஓ. உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பெரியபுலியூரில் கார்த்தி என்பவரது வீட்டில் சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்திவருகின்றனர். ராதாகிருஷ்ணன், கார்த்தி ஆகிய இருவரும் இன்ப்ரா புளூ மெட்டல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆவர்.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிரடி ரெய்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.