ETV Bharat / state

'தம்பி நாலு பேப்பர் பண்டல் கொண்டு வா..' - தனித்தேர்வர்களிடம் லஞ்சம் வாங்கும் தலைமை ஆசிரியை!

author img

By

Published : Mar 23, 2023, 10:10 PM IST

Etv Bharat
‘தம்பி நாலு பேப்பர் பண்டல் கொண்டு வா..’ - தனித்தேர்வர்களிடம் லஞ்சம் வாங்கும் தலைமை ஆசிரியை!

ஈரோடு ரயில்வே காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதும் 10ஆம் வகுப்பு தனித்தேர்வர் மற்றும் நன்னடத்தை சான்றிதழ் பெற வந்த மாணவரிடம் காகித பண்டல் வாங்கி வரச் சொன்னதாக தலைமை ஆசிரியை மீது புகார் எழுந்துள்ளது.

பள்ளித் தலைமை ஆசிரியை உடன் பத்திரிகையாளர் பேசும் வீடியோ

ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் தற்போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதேநேரம் மாவட்டம் முழுவதும் 10ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களுக்காக 3 மையங்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஈரோடு கொள்ளம்பாளையம் ரயில்வே காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான செயல்முறைத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பள்ளியில் சுமார் 70க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் மாவட்டம் முழுவதும் இருந்து பங்கேற்று வருகின்றனர்.

இதில் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், 10ஆம் வகுப்பு செயல்முறைத் தேர்வு அன்று குடும்பச்சூழ்நிலை காரணமாக தேர்வில் பங்கேற்கவில்லை. இதனால் மணிகண்டனை பள்ளியில் இருந்து தொடர்பு கொண்ட பெண் ஆசிரியர் ஒருவர், செயல்முறைத் தேர்வுக்கு வரும்போது ரெக்கார்டு நோட்டை எடுத்து வருவதுடன், தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி உள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் இன்று (மார்ச் 23) காலை ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளிக்கு வந்த தனித்தேர்வர் மணிகண்டன், பொருளாதார சூழ்நிலை காரணமாக பேப்பர் பண்டல் வாங்கி வர முடியவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு ‘'முடியாது, பேப்பர் பண்டலுடன் வா. இல்லை என்றால் வெளியே போ” என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதனையடுத்து நண்பர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மணிகண்டன் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

இதனிடையே இது குறித்த தகவல் அறிந்து பள்ளிக்குச் சென்ற செய்தியாளர்களின் ஒளிப்பதிவு சாதனத்தை, அப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது செய்தியாளர்கள், ‘நீங்கள் பேப்பர் பண்டலை லஞ்சமாக கேட்டதற்கான ரெக்கார்டு இருக்கிறது’ எனக் கூறியுள்ளனர். அதற்கு பதிலளித்துப் பேசிய தலைமை ஆசிரியை தேன்மொழி, “அப்படி எதுவும் நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

இதனையடுத்து அடுத்தடுத்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஆசிரியை, “நீங்கள் (பத்திரிகையாளர்கள்) உள்ளே வாருங்கள் பேசிக் கொள்ளலாம். நன்றாக செயல்படும் இந்தப் பள்ளியில் 1,250 பேர் வரையில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் பெயரை கெடுக்க வேறு யாருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு மணிகண்டன் செயல்படுகிறார். இதனை இவராகவே வாங்கி வந்தார்.

இது போன்று வாங்கிக் கொடுத்து என்னை பரீட்சை எழுத விடுங்கள் என்று மணிகண்டன்தான் கூறினார். பேப்பரும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உடனடியாக புறப்படுங்கள். பிரைவேட்டாக தேர்வு எழுதுங்கள், தம்பி (மணிகண்டன்)” எனத் தெரிவித்தார்.

இதனிடையே சிவக்குமார் என்ற முன்னாள் மாணவர் கையில் பேப்பர் பண்டல் உடன் பள்ளிக்குள் நுழைந்தார். இது தொடர்பாக விசாரிக்கையில், ''நன்னடத்தை சான்றிதழ் பெற பள்ளியில் விண்ணப்பித்துள்ளேன். என்னை 2 பண்டல் பேப்பர் வாங்க பள்ளித் தலைமை ஆசிரியர் கூறினார்’’ எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஆசிரியை தேன்மொழி, “இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் அவர். சான்றிதழ் வாங்க அவரே, அவரது பிரியத்தில் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். மருத்துவரிடம் சென்றால் 400 ரூபாய் ஆகிறது. அதனால் பள்ளிக்காக செய்கிறேன் என்று கூறிதான் வாங்கி வந்தார். என்னைக் கோர்த்து விடவேண்டும் என்றே, இது போன்று வருகின்றனர். வந்து இருக்கிறீர்கள்.

இந்தப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் 2.50 லட்சம் ரூபாய்க்கு ஒலிபெருக்கி வாங்கி கொடுத்துள்ளனர். 8 டிவி வாங்கிக் கொடுத்துள்ளனர். முன்னாள் மாணவர்கள் வாங்கிக் கொடுப்பதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தப் பள்ளியில் இலவச சீருடை அரசு வழங்கவில்லை.

6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புக்கு மட்டுமே வழங்குகிறது. இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் வெளியூரில் இருந்து, தான் படித்த பள்ளியைப் பார்க்க வரும்போது தாய் - தந்தை இல்லாத மாணவர்களுக்கு உதவி செய்கின்றனர்” எனத் தெரிவித்தார். ஆனால், ‘நன்னடத்தை சான்றிதழ் வாங்க வரும்போது பள்ளித் தலைமை ஆசிரியர்தான் இரண்டு பேப்பர் பண்டல் வாங்கி வரச் சொன்னார்’ என முன்னாள் மாணவர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நகைக்காக மூதாட்டியை கொலை செய்த இளைஞர்கள்; 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.