ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீன்கள் பிடிக்கப்பட்டு பவானிசாகரில் உள்ள அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
மீன் வளர்ச்சி கழக அலுவலக வளாகத்தில் இருந்த பழைய அலுவலக கட்டடம் குடோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பவானிசாகர் அணையில் மீன் பிடிப்பதற்காக டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரர் சக்தி அன்கோ நிறுவனத்தினர் இந்த குடோனில் எரிவாயு சிலிண்டர்கள், தெர்மோகோல் பெட்டிகள், மூன்று இருசக்கர வாகனங்கள், மற்றும் படகின் உதிரிபாகங்கள், மீன் வளர்ச்சி கழக அலுவலகத்தின் பழைய பர்னிச்சர்கள் போட்டு வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் இன்று(டிச.6) திடீரென இந்த குடோனில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 12க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்த நிலையில் இதில் 4 சிலிண்டர்கள் கேஸ் நிரப்பப்பட்டு வந்ததால் அந்த சிலிண்டர்கள் முழுவதும் வெடித்ததால் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் குடோன் முழுவதும் எரிந்து பொருள்கள் சேதமடைந்தன. ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குருதி ஆட்டம் ஃபர்ஸ்ட் லுக் - டீசர் தேதி அறிவிப்பு!