karthigai deepam: பழனி முருகன் கோவிலில் காப்புக்கட்டும் நிகழ்ச்சி!

author img

By

Published : Dec 1, 2022, 3:24 PM IST

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் காப்புக்கட்டும் நிகழ்ச்சி

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல்: கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள ஆலயங்களில் தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தீபக்கார்த்திகை திருவிழா சாயரட்சை பூஜை முடிந்த பின் காப்புக்கட்டுடன் துவங்கியது.

நேற்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்ற பின் ஆறு மணிக்கு மேல் அருள்மிகு வினாயகர், மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, தம்பதி சமேதர் அருள்மிகு சண்முகர் மற்றும் அருள்மிகு சின்னக்குமாரசாமிக்கு வேதமந்திரம், மேளதாளம் முழங்க காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தீபாராதனையைத் தொடர்ந்து சின்னக்குமாரசாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளினார். ஒருவார காலம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு தினமும் மாலையில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, யாகசாலை தீபாராதனை மற்றும் இரவு ஏழு மணிக்கு தங்கரதப் புறப்பாடு ஆகியன நடைபெறுகிறது. விழா நாட்களில் மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது.

வரும் 5-ஆம் தேதி ஆறாம் நாள் நிகழ்ச்சியாக சாயரட்சை பூஜையின் போது பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், டிச.6ம் தேதி ஏழாம் நாள் நிகழ்ச்சியாக திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பானை ஏற்றுதல் ஆகியன நடைபெறுகிறது. அன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். தொடர்ந்து 4.30 மணிக்கு சின்னக்குமாரசாமி தங்கமயிலில் எழுந்தருளி யாகசாலை சென்றபின் பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் காப்புக்கட்டும் நிகழ்ச்சி

பின்னர் மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். டிச.10 அன்று சொக்கப்பானை ஏற்றப்படுவதால் தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. காப்புக்கட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அறங்காவலர் குழுவினர், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் எல்.முருகன் ரகசிய யாகம்: பழனியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.