ETV Bharat / state

இன்று முதல் பழனி கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 9:47 AM IST

பழனி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை
பழனி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை

Mobile phone ban in palani temple: பழனி மலைக்கோயிலுக்குள் பக்தர்கள் கைப்பேசி, புகைப்பட கருவிகளைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலாகிறது.

பழனி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் செல்போனில் கருவறையை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கருவறையில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவா் சிலை, தங்கக் கோபுரம், தங்கத்தோ், தங்க மயில் ஆகியவற்றை திருவிழாக் காலங்களில் சிலா் கைப்பேசியில் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனா். மலைக்கோயிலில் புகைப்படம் எடுக்கக் கூடாது என பல இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு இருந்தாலும், பக்தா்கள் அவற்றை பின்பற்றுவதில்லை என புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பலரும் மூலவரைப் படமெடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியது.

இந்த நிலையில், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செல்போன் கொண்டு வருவதற்கான தடையை அமல்படுத்த வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் இன்று அக்டோபர் 1 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை என்பது அமலுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: குன்னூர் பேருந்து விபத்து! சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர்!

இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்லும் முன்பு மலை அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோயில், மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையத்தில் செல்போன், கேமிராக் கருவிகளை பிரத்யேகமாக அமைக்கபட்ட பாதுகாப்பு அறையில் 5 ரூபாய் கட்டணம் செலுத்தி வைத்துக் கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், செல்போன் வைப்பதற்கான அறைகள் அமைக்கப்பட்டும், அதற்கான பிரத்யேக பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் கொண்டு வரும் பக்தர்கள் கணினி மூலம் ரூ.5 கட்டணம் செலுத்தி புகைப்படத்துடன் கூடிய ரசீதினை பெற்றுச் செல்லவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக தனியாக ஊழியர்கள் நியமனம் செய்யபட்டு ரசீது வழங்கபடுகிறது.

முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதித்து அமலுக்கு வந்த நிலையில், இன்று முதல் பழனி முருகன் கோயிலிலும் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: Cyclinder Price Hike : காலையிலேயே ஷாக்! சிலிண்டர் விலை இவ்வளவு உயர்வா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.