ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ரெய்டு!

author img

By

Published : Jul 20, 2022, 8:37 PM IST

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை
தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

திண்டுக்கல்: நத்தம் முதல், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வரையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் சுமார் ரூ.100 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஒப்பந்தப் பணிகளை மதுரையைச் சேர்ந்த ஆர்.ஆர்.இன்பரா என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

சாலை அமைக்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, நத்தம் அடுத்துள்ள கோசுகுறிச்சி பகுதியில் தற்காலிக அலுவலகம் மற்றும் பொருள்கள் இருப்பு வைக்கும் கிடங்கியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான அதிமுக பிரமுகருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கோசுகுறிச்சியிலுள்ள ஆர்.ஆர்.இன்பரா நிறுவனத்தின் தற்காலிக அலுவலகத்தில் சோதனையிடுவதற்காக காலை 8 மணிக்கு வந்தனர். அந்த அலுவலகத்தின் மூலமாக, சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான கணக்கு விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

தற்காலிக அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள், டிப்பர் லாரிகள், கலவை இயந்திரத்துடன் கூடிய லாரிகள், டிராக்டர்கள் போன்ற வாகனங்களின் விவரங்கள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனை நடைபெற்றபோது, லாரி உள்ளிட்ட இதர வாகனங்கள் இயக்குவதற்கான ஓட்டுநர்கள் பணிக்கு வந்தபோது அவர்கள் அலுவலக அறைக்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால், ஓட்டுநர்கள் இன்று பணியில் ஈடுபடவில்லை. அதேநேரத்தில்,சாலை அமைக்கும் பணி நடைபெற்ற இடங்களில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். புதன்கிழமை மாலை 6 மணியை கடந்தும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.