ETV Bharat / state

வரதட்சணை கொடுமையால் தந்தை மரணம்: கணவருக்கெதிராக களமிறங்கிய பெண்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 5:13 PM IST

கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வரதட்சணை கொடுமையின் காரணமாக தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக இளம் பெண் உறவினர்களுடன் வந்து தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்

கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகள் இந்துமதிக்கும் செட்டி நாயக்கன்பட்டி நாகப்பா நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் குமரவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கணவர் குமரவேல் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி 50 பவுன் வரதட்சணையாக கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு மூன்று பவுன் நகையும், பெண்ணுக்கு 20 பவுன் நகையும், மூன்று லட்சமும் கொடுத்துத் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். திருமணமான பிறகு கணவர் குமரவேல் சென்னையிலும், மனைவி இந்துமதி செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மேலும் 20 பவுன் நகையும் 5 லட்சம் ரொக்க பணமும் கொடுத்தால் தான் உன்னுடன் குடும்பம் நடத்த முடியும் இல்லை என்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதோடு மட்டுமல்லாமல், மாமியார் வீட்டில் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக இந்துமதி தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

இந்துமதியின் தந்தை காளியப்பன் கணவர் குமரவேலின் குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது அவமதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மன வேதனை அடைந்த இந்துமதியின் தந்தை காளியப்பன் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் இந்துமதியின் தந்தை உயிருக்கு போராடிய நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 7ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்துமதியின் தந்தை இறப்பதற்கு முன்பாக மதுரை அரசு மருத்துவமனையில் மதுரை குற்றவியல் நீதிமன்ற நடுவர் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது. காளியப்பன் இறுதி சடங்குகள் நிறைவுற்ற நிலையில் இந்துமதியும் அவரது உறவினர்களும் நியாயம் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தனர்.

அந்த புகாரில் கணவர் குமரவேல், மாமனார் நாகராஜன், மாமியார் மகாலட்சுமி, பெரிய மாமனார் சேதுராமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துமதி தனது மனுவில் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளரர்களிடம் பேசிய இந்துமதி, ”தனது கணவர் குமரவேல் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக பொய் கூறி தன்னை திருமணம் செய்ததாகவும், வரதட்சணை தரக்கோரி தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறினார்.

இது தொடர்பாக வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போல் வெறியோடு, தாடிக்கொம்பு ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். எனவே மாவட்ட ஆட்சியர் தனது மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இதையும் படிங்க: பிரதமர் குறித்து அவதூறு கருத்து! காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட முயன்ற பாஜகவினரால் சலசலப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.