திண்டுக்கல்லில் நடைபெற்றுவரும் எட்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பள்ளிகளில் கற்றல், விளையாட்டைத் தாண்டி அறிவியல் இயக்கங்கள் அமைக்கவேண்டும். சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு அறிவியல் துறையிலுள்ள ஆர்வத்தை அதிகப்படுத்த அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இதற்காகப் பேராசிரியர்கள் வகுப்புகளில் பாடம் எடுப்பதைத் தாண்டி, அறிவியல் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் வகையில் மாணவர்களிடம் புது ஆராய்ச்சிகளை எடுத்துச் செல்லும் வழிமுறைகளை உருவாக்கியுள்ளோம். தொடர்ந்து குழந்தைகள் தங்கள் கற்கும் விஷயங்களிலிருந்து கேள்வி கேட்க அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். ஏனெனில் கற்றல் என்பது தொடர் நிகழ்வு, அது ஒருபோதும் நின்றுவிடக்கூடாது.
தொடர்ந்து அதிகமான செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இந்தியா அனுப்பி வருவதால் தயாரிப்பு பணிகளுக்கு ஒரு இடம் மட்டும் போதாது. எனவே இன்னொரு இடம் இருந்தால் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தென் தமிழ்நாட்டில் அந்த இடம் அமைந்தால் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருக்கும். குறைந்த எரிபொருள் செலவில் விண்ணில் செயற்கைக்கோளை செலுத்துவதற்கு தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் ஏவுதளம் அமைப்பது கூடுதல் சிறப்பாக அமையும்.
சந்திராயன் 2 மூலம் அனுப்பிய ஆர்பிட்டரின் ஆயுள்காலம் முடிவதற்குள், அடுத்தத் திட்டத்தின் மூலம் சிக்கனமான பட்ஜெட்டில் லேண்டரை மட்டும் அனுப்பி முழுமையான திட்டமாக மாற்றலாம். இதைச் சீக்கிரமாவும் சிக்கனமாகவும் செய்யலாம். சந்திராயன் 2 ஆர்பிட்டரானது, புதிதாக அனுப்பக்கூடிய சந்திராயன் 3 திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்” என்றார்.