தருமபுரி: காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 48 ஆயிரம் கன அடியும், கபினி அணைக்கு விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாகவும், கபினி அணையின் நீர்மட்டம் 81 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால் இரண்டு அணைகளில் இருந்து நீர் திறப்பு என்பது விநாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை(ஜூலை 22) மாலை கபினியில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 2 ஆயிரத்து 400 கன அடியும் என மொத்தம் காவிரி ஆற்றில் விநாடிக்கு 4 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து மழை தீவிரமடைந்து வருவதால், நீர் திறப்பு என்பது, விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி, 12,000 கன அடி என படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இன்று மாலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை திறக்கப்பட்ட 4 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்தது. இன்று காலை விநாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, தற்பொழுது 2 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நாளை மாலைக்குள் 17 ஆயிரம் கன அடி நீரும் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றங்கரையில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிட்டப் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மழை தீவிரத்தால் எந்த நேரத்திலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல், ஊட்டமலை போன்ற பகுதிகளில் வாகனத்தில் ஒலிபெருக்கி வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கிற்காக கரம்கோர்த்த ஓபிஎஸ் - டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க உதவுமா?